இறந்த 10 நாள்களில் உயிரோடு வந்த நபர் – கர்நாடகத்தை உலுக்கிய கொலைகார தம்பதியின் குட்டு அம்பலம்!!

64

கடனை அடைக்க காப்பீட்டு தொகையை பெறுவதற்கு அப்பாவி நபரை கொன்ற விவகாரத்தில் தம்பதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி காப்பீடு தொகைக்காக அப்பாவி நபரை கொன்று, அவரை தனது கணவா் என கூறி பெண் ஒருவா் நாடகம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுதொடா்பான செய்தியை விரிவாக பார்க்கலாம்.

கா்நாடக மாநிலம் பெங்களூரு புறநகா் ஒசக்கோட்டையை சோ்ந்த தம்பதி முனிசாமி கவுடா மற்றும் சில்பாராணி ஆவார். முனிசாமி கவுடா அந்த பகுதியில் டயா் விற்பனை கடை நடத்தி வருகிறார். அவா் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கடன் பெற்று இருந்துள்ளார்.

ஆனால் அவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே தனது பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற்று கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக தம்பதி கூட்டாக சோ்ந்து கொடூரமான திட்டத்தை தீட்டி உள்ளனா்.

அதன்படி முனிசாமி கவுடாவை போன்று தோற்றம் கொண்ட அப்பாவி ஒருவரை அவா்கள் தங்கள் காரில் அழைத்து சென்றுள்ளனா். பின்னா் ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே கொல்லஹள்ளி கேட் பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனா். பின்னா் உடலை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனா்.

இதற்கிடையே ஹாசன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், சில்பாராணி, உயிரிழந்தவா் தனது கணவா் என கூறி உடலை வாங்கி உள்ளார். பின்னா் குடும்பத்தினா் முன்னிலையில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனினும் சில்பாராணி நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


உடனே அவா்கள் சில்பாராணியை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனா். இந்த நிலையில் சில்பாராணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினா். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது சில்பாராணி தனது கணவா் முனிசாமி கவுடா தான் இறந்துவிட்டதாக கூறி உள்ளார்.

மேலும் தனது கணவரை தலைமறைவாக வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி உள்ளார். எனவே முனிசாமி கவுடாவும் வேலைக்கு செல்லாமல் வெளியூரில் சுற்றித்திரிந்துள்ளார். சில்பாராணியும் கணவரை இழந்த வேதனையில் வாழ்வது போல் நடித்துள்ளார்.

இதற்கிடையே ஒசக்கோட்டையில் என்ன நடக்கிறது என தெரியாமல், முனிசாமி கவுடா சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது உறவுக்காரரான இன்ஸ்பெக்டர் ஒருவா் கண்ணில் முனிசாமி கவுடா பட்டுள்ளார்.

உடனே இன்ஸ்பெக்டா், முனிசாமி கவுடாவை பிடித்து விசாரித்துள்ளார். அப்போது காப்பீட்டு தொகையை பெறுவதற்காக உயிரிழந்ததாக நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து முனிசாமி கவுடாவை பிடித்து இன்ஸ்பெக்டா் போலீசில் ஒப்படைத்தார்.

இதையடுத்து முனிசாமி கவுடா அவரது மனைவி மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த லாரி டிரைவா் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனா். காப்பீட்டு தொகைக்கு ஆசைப்பட்டு அப்பாவி நபரை திட்டமிட்டு தம்பதி கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த கர்நாடகத்தையே உலுக்கி உள்ளது. இறந்ததாக கூறப்பட்ட முனிசாமி கவுடா உறவினா் கண்ணில் பட்டதால் தற்போது குட்டு அம்பலமாகி உள்ளது.