“ஊரே அம்மாவ சூனியக்காரின்னு சொல்லி ஒதுக்கிச்சு”.. கேலி செய்த கிராமம் : உலக கோப்பை ஜெயிச்சு வீராங்கனை கொடுத்த பதிலடி!!

2256

உத்தர பிரதேச மாநிலம்…

ஐசிசி நடத்திய முதல் மகளிருக்கான Under 19 டி 20 உலக கோப்பை இதுவாகும். இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் முன்னேற்றம் கண்டிருந்தது.

இறுதி போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. 17.1 ஓவர்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 14 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், மகளிருக்கான முதல் 19 வயதுக்கு உட்பட்டோர் டி 20 உலக கோப்பையையும் இந்திய மகளிர் அணி வென்று வரலாற்று சாதனையும் புரிந்துள்ளது.


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியை கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கொண்டாடியும் வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்த அர்ச்சனா தேவி, ஒரு அற்புதமான கேட்ச்சையும் பிடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கையும் வகித்திருந்தார்.

 இந்த நிலையில், அர்ச்சனா தேவி மற்றும் அவரது தாயார் பட்ட கஷ்டங்கள் தொடர்பான விஷயம் பெரிய அளவில் பலரையும் மனம் உருக வைத்து வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ரதாய் புர்வா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தான் அர்ச்சனா தேவி. அர்ச்சனாவின் சிறு வயதில் அவரது தந்தை புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அதே போல, அவரது சகோதரரும் பாம்பு கடித்து சிறு வயதில் உயிரிழந்துள்ளார். இதனால், அர்ச்சனா தேவியின் தாயார் கிராம மக்கள் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளார்.

மேலும் சூனியக்காரி என்றும் ஊர் மக்கள், அர்ச்சனாவின் தாயை குறிப்பிட்டு வந்துள்ளனர். இதற்கிடையில், மகளின் கிரிக்கெட் கனவுக்காக அர்ச்சனாவை விளையாட அனுப்பியதும் அவருக்கு விமர்சனத்தை தான் பெற்று கொடுத்துள்ளது.

தவறான வழியில் மகளை செலுத்தியதாகவும் பழி போட, அவை அனைத்தையும் தாண்டி மகள் கனவை அடைய வேண்டும் என்பதில் அர்ச்சனா தேவியின் தாயார் உறுதியாக இருந்துள்ளார்.

தொடர்ந்து, தனது கிராமத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கான்பூர் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார் அர்ச்சனா. ஆனால், அங்கு சென்று வர போதிய வசதி இல்லாத காரணத்தினால், பள்ளி ஆசிரியர் ஒருவர் கான்பூரில் அறை எடுத்து தங்க உதவி செய்துள்ளார்.

இப்படி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வென்று காட்டிய அர்ச்சனா தேவி, பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அதே போல, அர்ச்சனாவின் தாயாரை வசைபாடி வந்த அதே கிராம மக்கள்,

உலக கோப்பை வென்ற அணியில் அர்ச்சனா தேவி இடம்பிடித்து சாதனை படைத்துள்ளதையடுத்து வசை பாடியவர்கள் அர்ச்சனா தேவியின் குடும்பத்தினரை கொண்டாடியும் வருகின்றனர்.