கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. 9 மாத கைக்குழந்தையுடன் தற்கொலை!!

59

மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறு காரணமாக 9 மாத கைக்குழந்தையுடன் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மங்கை நல்லூர் ஜெயராஜ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(30). ஹோட்டல் தொழிலாளியான இவருக்கும், சங்கீதா (25) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

இவர்களுக்கு 9 மாதத்தில் ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. விக்னேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு விக்னேஷ் வீட்டில் இல்லாதபோது, சங்கீதா மற்றும் குழந்தை ஆகியோர் தனியாக இருந்துள்ளனர். திடீரென அவரது வீட்டில் இருந்து சத்தம் கேட்பது அறிந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு, சங்கீதாவும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் கைக்குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.