கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற காதல் கணவன்: விசாரணையில் பிடிபட்டது எப்படி?

745

குடிபோதையில் கடப்பாரை கம்பியால் நான்கு மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி(25). இவரது மனைவி தேவி(21).

இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஹரி குடிபோதைக்கு அடிமையானதால் குடித்து விட்டு அடிக்கடி தேவியிடம் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்றும் குடித்து விட்டு தேவியிடம் பிரச்சனை செய்த ஹரி ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கடப்பாரை கம்பியை எடுத்து தேவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து தேவியின் கணவர் ஹரியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறுகையில், ஹரி மற்றும் தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் காதலுக்குத் தேவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவல்நிலையத்தில் வைத்து இருவருக்கும் ஆலோசனை வழங்கினோம்.

இதனையடுத்து ஹரியைத் திருமணம் செய்யத் தேவி சம்மதம் கூறியதின் அடிப்படையில் ஹரிக்கும் தேவிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தேவிக்குத் தனது கணவர் ஹரி குடிபோதைக்கு அடிமையாகி இருந்தது தெரியாது. திருமணத்திற்குப் பின்னர் ஹரி தினமும் மதுக் குடித்து வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துகொண்டிருந்தது.

அந்த வகையில் நேற்று இருவருக்கும் பிரச்சனை முற்றியதால் குடிபோதையிலிருந்த ஹரி கடப்பாரை கம்பியால் தேவியை அடித்து கொடூரமாகக் கொலை செய்து உள்ளார்.

தற்போது ஹரியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here