சென்னையில்..
சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(37). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சன்பிரியா(30). இவர்களுக்கு கீர்த்தனா(12) ஓவியா (7) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு அன்று இரவு பிரேம்குமார் அயனாவரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் நியூ ஆவடி ரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆர்டிஓ அலுவலகம் அருகே பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேம்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அயனாவரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30) என்பவரை கைது செய்தனர். இதனிடையே பிரேம்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது அக்கா சங்கீதா அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் பிரேம்குமார் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
அயனாவரம் செட்டித்தெருவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(30) என்பவருக்கும் பிரியாவுக்கும் இடையே பல மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் கணவர் பிரேம்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரியா, தனது கள்ளக்காதலன் ஹரிகிருஷ்ணனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். அதன்படி பிரேம்குமாரை காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி மனைவி பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமா படப்பாணியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவி தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.