காதலன் துணையுடன் கணவனை கொன்ற பெண் : பிடிக்க உதவிய கான்ஸ்டபிளின் வாய்பேச முடியாத மகன்!!

163

மும்பை சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த அர்ஷத் ஷேக் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்டார். அவரின் உடலை சூட்கேஸில் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்ற ஜெய் சவ்தா என்பர் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தி, இக்கொலையைச் செய்த சிவ்ஜித் சிங் என்பவரும் கைதுசெய்யப்பட்டார். கொலைசெய்யப்பட்ட நபர் மற்றும் கைதுசெய்யப்பட்ட இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர். மூவரும் பள்ளியில் படித்தபோதே நண்பர்களாக இருந்தனர்.

கொலையாளிகள் இரண்டு பேரும் பேச முடியாதவர்கள் என்பதால், அவர்களிடம் விசாரணை நடத்த மொழிப்பாளர்களை போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். இது தவிர கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தார்.

அவரையும் போலீஸார் விசாரணையின்போது உதவிக்கு அழைத்து வந்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கைதுசெய்யப்பட்ட இருவரும் வாய்பேச முடியாதவர்கள் என்பதால், அவர்களிடம் விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் வாய் பேச முடியாதவர்கள் படிக்கும் சாத்னா வித்யாலயா பள்ளியின் உதவியை நாடினோம். ஆரம்பத்தில் இப்பள்ளி எங்கு இருக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தோம். குற்றவாளிகளுடன் சைகை மொழியில் பேசக்கூடியவர் தேவைப்பட்டது.

வடாலாவில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் ராஜேஷ்தான், அப்பள்ளி தாதரில் இருப்பதாகத் தெரிவித்தார். அதோடு தனது 23 வயது மகனும் பேசமுடியாத காது கேளாதவர் என்று தெரிவித்தார். உடனே அதிகாலை 2 மணிக்கு கான்ஸ்டபிள் வீட்டிற்குச் சென்று அவரது மகனை தாதர் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம்.


நாங்கள் கான்ஸ்டபிள் மகன் கெளரவிடம் கேள்விகளை கொடுத்து குற்றவாளியிடம் பேசச் சொன்னோம். ஜெய் சவ்தாவிடம் கெளரவ் பேசி உண்மைகளை வரவழைத்தார். அவரிடம் விசாரணை நடத்தி அர்ஷத் மனைவி உட்பட மொத்தம் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்” என்றார்.

இது குறித்து கான்ஸ்டபிள் ராஜேஷ் கூறுகையில், ”எனது மகன் கொலை வழக்கில் உதவி செய்து இருப்பது, எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். இக்கொலை குறித்து போலீஸார் மேலும் கூறுகையில், “ஜெய் சவ்தாவும், அர்ஷத் மனைவி ருக்‌ஷானாவும் ஓர் ஆண்டாக தொடர்பில் இருந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சேர்ந்துதான் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். ஜெய் சவ்தா தான் சிவ்ஜித்தை கொலை செய்ய ஏற்பாடு செய்தான். அதனை தொடர்ந்து அர்ஷத்தை ஜெய் தனது வீட்டிற்கு பார்ட்டிக்கு வரும்படி அழைத்தார். அங்கு மது அருந்திய பிறகு அர்ஷத்தை அவர்கள் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர். சிவ்ஜித் கயிற்றால் அர்ஷத் கழுத்தை நெரித்துள்ளார்.

அதோடு சுத்தியலால் அடித்துள்ளார். இதனை வெளிநாட்டில் இருக்கும் தனது நண்பர் ஜெக்பால் என்பவருக்கு ஜெய் வீடியோ கால் செய்து கொலை செய்வதை காண்பிடித்தார். ருக்‌ஷானா போன் செய்து ஜெய்யிடம் காரியம் முடிந்ததா என்று கேட்டுள்ளார்.

உடனே ஜெய் வீடியோ கால் மூலம் அர்ஷத் உடலை காட்டி இருக்கிறார்” என்று தெரிவித்தனர். வீடியோ கால் மூலம் இருவரும் சேர்ந்து கொலைக்கான சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.