காதலிக்கலைன்னா கொன்று விடுவேன்… மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

226

ஹாசன் மாவட்டத்தில்..

ஹாசன் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து தன்னைக் காதலிக்கச் சொல்லி வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்த நிலையில், தன்னைக் காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று இளம்பெண்ணுக்கு அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்ததால், பதட்டத்திலும், பயத்திலும் என்ன செய்வது என தெரியாமல் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் நிடுகுடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(21). பி.காம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ள சங்கீதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா என்ற வாலிபர் காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது காதலை சங்கீதா ஏற்காத நிலையில், தொடர்ந்து சங்கீதாவை ஒருதலையாக சிவா காதலித்து வந்துள்ளார். சங்கீதா எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து தன்னைக் காதலிக்கும்படி தொடர்ந்து சிவா தொந்தரவு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில், தன்னைக் காதலிக்கவில்லை என்று சங்கீதா சொல்லியும், அதைக் கேட்காமல் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சிவா டார்ச்சர் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேலூரில் உள்ள அய்யப்பஸ்வா கோயிலுக்கு சங்கீதா குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது சிவாவும் அங்கு வந்தார். அங்கு சங்கீதாவை பார்த்து, என் போன் அழைப்பை ஏன் எடுக்கவில்லை என்று திட்ட ஆரம்பித்தார். அத்துடன் என்னைக் காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.


இதனால் சங்கீதா மிகவும் கவலையடைந்தார். காதலிக்க முடியாது என்று எத்தனை முறை சொல்லியும், கேட்காமல் தினமும் தொல்லை கொடுப்பதுடன், காதலிக்கவில்லை என்றால் கொலை செய்வேன் என்று சிவா மிரட்டுவதால் மன உளைச்சல் அடைந்தார். தன்னால் தன் குடும்பத்திற்கு கெட்டப்பெயர் வந்து விடுமோ என்று அச்சமடைந்த சங்கீதா, நேற்று வீட்டில் யாருமில்லாத போது, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைக்குச் சென்றிருந்த அவரது பெற்றோர், வீட்டிற்கு வந்து பார்த்த போது, சங்கீதா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் அலறித் துடித்தனர். இச்சம்பவம் குறித்து பேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.