காதல் திருமணத்திற்கு எதிராக நடந்த கெளரவக் கொலை.. வாலிபரைக் கொன்ற 2 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

262

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மார்பல்லியைச் சேர்ந்தவர் நாகராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரை கானாபூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான அஷ்ரின் சுல்தானா காதலித்தார். இவர்களது காதலுக்கு அஷ்ரின் சுல்தானா வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், 2022 ஜனவரி 31-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அஷ்ரின் சுல்தானா, லால் தர்வாசா பகுதியில் உள்ள ஆர்ய சமாஜம் கோயிலில் நாகராஜை திருமணம் செய்து கொண்டார். இதன் பின் அவரது பெயரை பல்லவி என மாற்றிக் கொண்டார். இந்த திருமணத்திற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நாகராஜீக்கு மிரட்டல் விடுத்து வந்தனர்.

இதனால் உயிருக்குப் பயந்து இளம்ஜோடி, விசாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்ந்தது. சிறிது காலம் அங்கு தங்கியிருந்த நாகராஜ், அஷ்ரின் தம்பதி, ஹைதராபாத் நகரில் உள்ள சரூர்நகரில் உள்ள பஞ்ச அனில்குமார் காலனியில் குடியேறினர். நாகராஜின் பெற்றோர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தனர்.


அவரது சகோதரி ரமாதேவி கணவரை பிரிந்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், திருமணமான ஜோடி எங்கிருக்கிறார்கள் என்பதை அஷ்ரின் சுல்தானாவின் சகோதரர் மொபின் அகமது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்.

வீட்டில் இருந்த அஷ்ரீன் செல்போன் மூலம் நாகராஜின் எண்ணைக் கண்டுபிடித்து அதை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார். அத்துடன் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து ஒரு மாதமாக நாகராஜை பின் தொடர்ந்துள்ளார்.

நாகராஜை கொலை செய்வதற்காக அவர் காத்திருந்தார். கார் ஷோரூமில் நாகராஜ் வேலை செய்து வந்தார். கடந்த 2022 மே 4-ம் தேதி சரூர்நகர் அருகே கடைக்குச் சென்று கொண்டிருந்த நாகராஜை மொபின் அகமது,

அவரது மைத்துனர் முகமது மசூத் அகமது ஆகியோர் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொடூர சம்பவத்தின் போது, தனது கணவரை விட்டு விடுமாறு அஷ்ரீன் கெஞ்சியும் அவர்கள் கொடூரமாக இரும்புக் கம்பியால் தாக்கியும், கத்தியாலும் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்தார். ஹைதராபாத்தில் நடந்த கவுரவக்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த விசாரணையின் நிறைவாக கொலை, கிரிமினல் சதி மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் விதிகள் ஆகிய மூன்று பிரிவுகளில் நாகராஜை கொலை செய்த மொபின் முகமது, முகமது மசூத் அகமது ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1000 அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.