பட்டுக்கோட்டையில்..
பட்டுக்கோட்டை அருகேயுள்ள வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரின் மகன் நவீன் (19). மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் படிப்பை முடித்த இருவரும், திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன்பு நண்பர்கள் முன்னிலையில் நவீனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வாட்ஸ்அப் குரூப்பில் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பல்லடம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஐஸ்வர்யாவின் உறவினர்கள் போலீஸ் தரப்பில் பேசி, ஐஸ்வர்யாவை மட்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை அவரின் உறவினர்கள் அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்றும், வாட்ஸ்அப்பில் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மர்மான முறையில் உயிரிழந்த ஐஸ்வர்யாவின் உடலை, உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுக்காமல், எரித்துள்ளனர். பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஐஸ்வர்யா ஆணவக் கொலைசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் பூவாளூர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிலரிடம் பேசினோம். “நவீனும், ஐஸ்வர்யாவும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக ஐஸ்வர்யா பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த சமயத்தில் நவீன் பெற்றோரிடம் `உன் மகன் என் மகளுடன் பழகக் கூடாது. மீறினால் என்ன நடக்கும் என்றே தெரியாது’ எனப் பிரச்னை செய்தனர். அதன் பிறகும் யாருக்கும் தெரியாமல் இருவரது காதல் தொடர்ந்தது. படிப்பு முடிந்த பிறகு, இருவரும் திருப்பூரில் வெவ்வேறு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.
நவீன், ஐஸ்வர்யாவின் பெயரை `ஐஸ்’ என ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு ஐஸ்வராய் மேல் உயிரையே வைத்திருந்தான். இந்த நிலையில் இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது குறித்த தகவல் தெரிந்து, ஐஸ்வர்யாவின் உறவினர்கள் நவீன் அப்பாவிடம் `உன் மகனை நீ அழைத்துக் கொள், எங்கள் பிள்ளையை நாங்கள் அழைத்துச் செல்கிறோம். இதை வெளியே தெரியாமல் முடித்துக் கொள்வோம்’ என அவரையும் அழைத்துச் சென்று, இரண்டு பேரும் எங்கிருக்கிறார்கள் எனத் தேடியுள்ளனர்.
இதையடுத்து பல்லடம் காவல் நிலைய போலீஸார் நவீன், ஐஸ்வர்யா இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததுடன், ஐஸ்வர்யாவை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர். நவீனும் தனியாக ஊருக்கு வந்துவிட்டான். அடுத்த நாளே ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
அவரின் உடலை உறவினர்கள் எரித்துவிட்டனர். ஐஸ்வர்யாவின் உறவினர்கள் அவரை அடித்து சித்ரவதை செய்த வீடியோ ஒன்றும் வெளியானதாகத் தெரிகிறது. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதற்காக ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து ஆணவக் கொலைசெய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றனர்.
இது குறித்து நவீனிடம் பேசினோம். “ஐஸ்வர்யாவும் நானும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் காதலித்து வந்தோம். திருப்பூரில் வேலை செய்த இருவரும், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரே அறையில் ஓன்றாக தங்கியிருந்தோம். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். ஐஸ்வர்யாவின் உறவினர்கள் எங்களை தேடி வந்த நிலையில், நாங்கள் வேறு இடத்துக்குச் சென்று விட்டோம். `நம்மைக் கொலைசெய்து விடுவார்கள்… வா நாம் எங்காவது போய்விடலாம்’ என ஐஸ்வர்யா கூறினாள்.
அதற்குள் பல்லடம் காவல் நிலையத்திலிருந்து வந்த ஒரு போலீஸ்காரர், நாங்கள் இருக்கிற இடத்துக்கு வந்து, பென்ணை மட்டும் அழைத்தார். விட முடியாது நானும், கூட வருவேன் என்றேன். உன்னை கொலைசெய்யக்கூட தயங்க மாட்டார்கள்… அப்படி வெறியுடன் இருக்கிறார்கள்’ எனக் கூறிவிட்டு, பென்ணை அழைத்துச் சென்றார். நான் காவல் நிலைய வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். போலீஸிடம் பேசிய பிறகு ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றனர். நான் பைக்கிலேயே ஐஸ்வர்யா சென்ற காரைத் தொடர்ந்து வந்தேன்.
கார் ஐஸ்வர்யா ஊருக்குள் சென்ற பிறகுதான், நான் என் வீட்டுக்கு வந்தேன். மறுநாள் ஐஸ்வர்யாவைக் கொலைசெய்து விட்டதாகத் தகவல் வந்தது. உடனே பதறியடித்துக் கொண்டு ஓடினேன். என் அப்பாவும் நண்பர்களும் என்னைப் போகவிடாமல் தடுத்துவிட்டனர். போலீஸார் அழைத்தபோது, நான் போக மாட்டேன் எனச் சொன்னவளை, நான்தான் அனுப்பிவைத்தேன். அதன் பிறகு அவள் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் செய்துவிட்டனர்” என்றார். இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், “ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.