கொரோனாவோடு வெளிநாட்டிற்கு விமானத்தில் தப்பி ஓடிய இளம் பெண்! அதிகாரிகள் அதிர்ச்சி: எந்த நாட்டிற்கு தெரியுமா?

962

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண், சிறப்பு விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய சம்பவம் அதிகாரிகளுடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் ஆகி வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர முதலிடத்தில் உள்ளது.

இதற்கிடையில், நாட்டில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத்தனிமையில் இருந்த பெண் ஒருவர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட யாருக்கும் தெரியாமல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு சிறப்பு விமானத்தில் தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 30 வயது நிரம்பிய பெண் புனேவில் தான் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பத்திரப்பதிவு நடைமுறைகளுக்காக கடந்த மார்ச் மாதம் இந்தியா சென்றுள்ளார்.

அவர் மகாராஷ்டிரா வந்த சில நாட்களில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமான பயணங்கள் தடை செய்யப்பட்டது.

இதனால் அப்பெண் புனேவில் உள்ள புனவாலே என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இதற்கிடையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அப்பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் அப்பெண்ணை வீட்டுத்தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அப்பெண் உள்பட பலர் வசித்துவந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு கடந்த 17-ஆம் திகதி தனது குடியிருப்பை விட்டு வெளியேறிய இவர், அதன் பின் அவர் தனது குடியிருப்புக்கு திரும்பி வரவே இல்லை.

இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது,வைரஸ் உறுதி செய்யப்பட்ட அப்பெண் மருந்து வாங்க செல்வதாக கூறி குடியிருப்பை விட்டு வெளியே சென்று மும்பையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் ஏறி தனது குடும்பத்தினர் வசித்து வரும் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபாய் நகருக்கு தப்பிச்சென்றுள்ளார் என்ற தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் துபாய் சென்றபோதும் சார்ஜா விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையில் தனக்கு அப்போது கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அப்பெண் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, 30 வயது நிரம்பிய அப்பெண் மீது கொரோனா விதிமுறைகளை மீறி வெளிநாடு தப்பிச்சென்ற குற்றத்திற்காக சுகாதாரத்துறையினர் பொலிசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பெண்ணுக்கு துபாய் செல்ல சிறப்பு விமானத்தில் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொடு வருகின்றனர்.