சுவிஸில் அகதி இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து: பொதுமக்களின் சமயோசித செயல்..!!

729

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் ஆப்கான் அகதி இளைஞரை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு மாயமான சிறுவனை பொதுமக்களின் தகவலை அடுத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

சூரிச்சின் Utoquai பகுதியில் குறித்த சம்பவம் ஞாயிறு இரவு சுமார் 11.30 மணியளவில் நடந்துள்ளது.

அப்போது அந்த வழியாக ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலிசாரை அணுகிய பொதுமக்கள் உதவ கோரியதுடன், நடந்தவற்றை புகாராக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 19 வயதான ஆப்கான் அகதி இளைஞருக்கும் 15 வயதேயான சுவிஸ் சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுவிஸ் சிறுவன் தம்மிடம் இருந்த கத்தியால் ஆப்கான் இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளான். ரத்தவெள்ளத்தில் சரிந்த ஆப்கான் இளைஞரை பொதுமக்கள் மீட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து மாயமான சுவிஸ் சிறுவனை பொலிசார் ரயில் நிலையம் ஒன்றில் கைது செய்துள்ளனர். இதனிடையே, மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவித்த பொலிசார், காயம்பட்ட இளைஞருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளனர்.


தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொதுமக்களின் சமயோசித முடிவால் ஆப்கான் இளைஞர் காப்பாற்றப்பட்டதாகவும், தப்பிய குற்றவாளியை கைது செய்ய உதவியது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

சரியான பின்னணி மற்றும் குற்றம் நடந்த இடம் தொடர்பில் தெளிவான தகவல் ஏதும் இல்லை எனவும் அவை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பில் உறுதியான சாட்சி தேவை எனவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.