சொகுசு வாழ்கைக்கு ஆசை… ஆண் நண்பருடன் சிக்கிய நர்ஸ் செய்த மோசமான செயல்!!

2559

சென்னையில்..

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் மதுரகவி (85). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளரான இவர் தனது மனைவி சுந்தரவள்ளி என்பவருடன் கீழ் தளத்தில் குடியிருந்து வருகிறார். அதே வீட்டின் மேல் தளத்தில் அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். மதுரகவியின் மருமகள் போக்சோ நீதிபதியாக பணிபுரிந்து வருகின்றார்.

இந்த நிலையில் மதுரகவியின் மனைவி சுந்தரவள்ளிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அண்ணா நகரில் உள்ள அமுதா ஏஜென்சி மூலம் செவிலியர்களை பணியமர்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 185 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருப்பதை கண்டு மதுரகவி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் மதுரகவி புகார் அளித்தார். புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதுரகவியின் மனைவி சுந்தர வள்ளியை கவனித்து வந்த செவிலியர் தேவி (32) திடீரென பணியிலிருந்து நின்றது தெரியவந்தது.

இதனையடுத்து ஏஜென்சி மூலம் விசாரணை மேற்கொண்ட போது செவிலியர் தேவியின் செல்போன் எண் அணைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாலா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தேவி அண்ணா நகரில் இயங்கி வரும் அமுதா ஏஜென்சியில் பொய்யான முகவரியை கொடுத்து பணிக்கு சேர்ந்திருப்பது தெரியவந்தது.

தேவியின் செல்போனுக்கு கடந்த சில தினங்களில் யார் அதிக முறை போன் செய்துள்ளார்கள் என விசாரணை மேற்கொண்டதில் ஜெகநாதன்(34) என்ற நபர் ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டது தெரியவந்தது.

5- ம் தேதி மாலையில் இருந்து ஜெகநாதன் என்பவரின் செல்போன் எண்ணானது மதுரை, திருச்சி, திண்டுக்கல், மீண்டும் மதுரை, விழுப்புரம் என மாறி மாறி சிக்னல் காட்டி உள்ளது. இதனால், தீவிரமாக செல்போன் எண்ணை பின்தொடர்ந்து சென்றனர்.

இந்த நிலையில் தேவியும் அவரது ஆண் நண்பருமான ஜெகநாதனும் விழுப்புரம் அருகே லாட்ஜ் ஒன்றில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தபோது போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செவிலியர் தேவியும் அவரது ஆண் நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரும் சேர்ந்து ஓய்வு பெற்ற பொறியாளர் மற்றும் போக்சோ நீதிபதியின் வீட்டில் திருடியது அம்பலமானது.

இருவரையும் கைது செய்த போலீசார் இருவரிடமும் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒரே ஊரைச் சேர்ந்த தேவியும் ஜெகநாதனும் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

செவிலியர் தேவிக்கு திருமணம் ஆகி கருத்து வேறுப்பாடின் காரணமாக கடந்த நான்கு ஆண்டு காலமாக தனது கணவருடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் தனது ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பருடன் நட்பு ஏற்பட்டு பின் காதலாகி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

சென்னையில் ஸ்விகியில் பணிபுரிந்து வரும் ஜெகநாதன், தேவியை அண்ணா நகரில் இயங்கி வரும் அமுதா ஏஜென்சியில் போலி முகவரி கொடுத்து பணியில் சேர்த்து விட்டுள்ளார்.

மேலும், ஜெகநாதன் தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளோடு அடையாறு பகுயில் வசித்து கொண்டு, தேவியுடன் அவ்வபோது தனிமையில் காதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் மதுரகவியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஏஜென்சி மூலமாக அவரை கவனித்துக் கொள்ள தேவியிடம் அணுகியுள்ளது அந்த ஏஜென்சி.. இதையடுத்து பணிக்கு வந்த தேவி பீரோவில் நகைகள் மற்றும் பணம் இருப்பதை அறிந்து,

ஜெகநாதனிடம் சொல்லி இருவரும் திட்டமிட்டு கடந்த 5-ம் தேதி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் என சுற்றியுள்ளனர்.

போலீசார் விசாரணையில் தானும் ஜெகநாதனும் சேர்ந்து சொகுசாக வாழவேண்டும் எனவும், செவிலியர் மற்றும் ஸ்விகி வேலையில் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியவில்லை என்பதால், மதுரகவியின் வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மேலும், வாரம் ஒரு முறை செவிலியர் மாறுவதால், தான் திருடினால் சந்தேகம் வராது என்ற எண்ணத்தில் திட்டமிட்டு திருடியதாக கூறினார். மேலும் போலீசார் விசாரணையில் மதுரகவி தன் வீட்டில் திருடியது 185 சவரன் என புகார் அளித்திருந்த நிலையில் செவிலியர் தேவியும் அவரது ஆண் நண்பரும் பீரோவில் இருந்து திருடியது 210 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 50,000 பணம் என தெரியவந்தது.

மேலும் ஜெகநாதன் அடையாரில் உள்ள தனது வீட்டில் டி.வி ஸ்பீக்கரில் நகைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்த போலீசார் 207 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 30 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

துரிதமாக விசாரணை மேற்கொண்டு 3 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிமாலா தலைமையிலான போலீசாரை காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.