ஜேர்மனியில் படித்து கொண்டு இணையத்தில் தமிழ் பெண்களை நண்பர்களாக்கி இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்!

668

தமிழகத்தில் பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவதாகப் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணைத் தொடர்புகொண்டு, இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி கும்பல் ஒன்று, பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாக கூறியுள்ளார்.

முகம்மது முகைதீன்
மேலும், அப்பெண்களைக் கட்டாயப்படுத்தி, வீடியோ காலில் நிர்வாணமான நிலையில் பேசும்படி மிரட்டிப் பதிவுசெய்து கொண்டு, அதை வெளியிட்டுவிடுவதாகக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதுபோன்று தன்னை மிரட்டி 7.50 லட்ச ரூபாயை வங்கிக் கணக்குகள் மூலம் அபகரித்துக்கொண்டதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் புகாரளித்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் பொலிசார் சம்பந்தப்பட்ட கும்பலின் சமூக வலைதளங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றைக் கண்காணித்தனர்.

பைசல்
அப்போது, அதில் ஜேர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது முகைதீன் என்பவரது தலைமையிலான கும்பல், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

முகம்மது முகைதீன், பல பெண்களிடம் இது போன்று பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன், தமிழகத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களது வங்கிக் கணக்குகள் மூலம் பெண்களிடம் இருந்து அபகரிக்கப்படும் பணத்தை தன் கணக்குக்கு மாற்றியதும் கண்டறியப்பட்டது.

ஜாசம் கனி
இவன் மட்டுமின்றி, புதுச்சேரி முகம்மது இப்ராஹீம் நூர், சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோர், இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்கி, அதன்மூலம் நண்பர்களாகும் பெண்களின் படங்களை மார்பிங் செய்தும், அதைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here