ஜோதிகாவை கரம்பிடித்த நிகில்: எல்லையில் படுஜோராக நடந்த திருமணம்!

587

இபாஸ் கிடைக்காததால் தமிழக- கேரள எல்லையில் இரு வீட்டார் கலந்துகொள்ள இனிதே திருமணம் நடந்து முடிந்தது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத்-சுலேகா ஆகியோரின் மகன் நிகில் (வயது 27).

இவருக்கும் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன்- ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 26-ந் திகதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.

அப்போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அன்று திருமணம் நடைபெறவில்லை.இதன்பிறகு திருமணம் ஜூன் 3-ந் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும் ஊரடங்கு அமலில் இருந்ததால், எந்தவித தளர்வுகளும் இல்லை. மேலும் மணமகனுக்கும் அவர்களது வீட்டாருக்கும் பாஸ் கிடைக்காததால் நேற்று திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

அத்துடன் கேரளாவுக்கு செல்ல மணமகள் வீட்டார் விண்ணப்பித்தபோது, மணமகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ள திருமணம் நடந்து முடிந்தது. இத்திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.