தகாத உறவுக்கு இடையூறு கூலிப்படையை ஏவிய கர்ப்பிணி மனைவி : கணவருக்கு நடந்த பயங்கரம்!!

483

திருச்சி…

திருச்சி அருகே காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை ஏவி கொன்ற கர்ப்பிணி மனைவி, அவரது காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவரான இவருக்கு பானுமதி(38) என்ற மனைவி, 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2வதாக பானுமதி கர்ப்பமாக உள்ளார்.

டிரைவர் தொழிலை நிறுத்திவிட்டு வடிவேல் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கர்ப்பிணியான பானுமதி, சில நாட்களுக்கு முன் கரூரில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றுவிட்டதால் வடிவேல் மட்டும் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2ம்தேதி காலை நீண்டநேரமாகியும் வடிவேலின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது வடிவேல் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது.


இதுதொடர்பாக பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வடிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வடிவேலு தலையில் பலத்த காயம் இருந்ததால் அவரது மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. யாராவது கொலை செய்து சடலத்தை தொங்கவிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

இதில் முதல் கட்டமாக வடிவேலு மனைவி பானுமதியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பானுமதிக்கும், குளித்தலை இனுங்கூரை சேர்ந்த முருகேசன் (எ) கருப்பசாமி(32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் தகாத உறவாக மாறியது. இந்த சம்பவம் தெரியவரவும் பானுமதியை வடிவேல் கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய பானுமதி திட்டம் தீட்டினார்.

இதற்காக கூலிப்படையை சேர்ந்த சீராத்தோப்பு அருண்(34), உறையூர் காவேரிநகர் சிராஜுதீன்(23) ஆகியோருக்கு ரூ.1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தனர். பின்னர் புத்தாண்டு அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த வடிவேலுவிடம் தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் சென்ற கூலிப்படையினர் அருண், சிராஜுதீன் ஆகிய 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையில் தாக்கினர்.

இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த வடிவேலுவின் கழுத்தில் கயிற்றை கட்டி தூக்கில் தொங்க விட்டு சென்றுவிட்டனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கர்ப்பிணி மனைவி பானுமதி, அவரது கள்ளக்காதலன் கருப்பசாமி, கூலிப்படையை சேர்ந்த அருண், சிராஜுதீன் ஆகிய 4 பேரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.