கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நள்ளிரவில் கோரமங்களா பகுதியில் லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் 22 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைச் செய்யப்பட்ட இளம்பெண் பீகாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி என்பதும் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோரமங்களாவில் உள்ள விஆர் லேஅவுட்டில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், சந்தேகப்படும் நபர் ஒருவர் நள்ளிரவு 11.10 முதல் 11.30 மணி வரை லேடீஸ் ஹாஸ்டலுக்குள் கத்தியுடன் புகுந்துள்ளார். அதன் பின்னர் அவர், 3வது மாடியில் உள்ள ஒரு அறைக்குள் நுழைந்து, கிருத்தி குமாரியைத் தாக்கியுள்ளார்.
கழுத்தை அறுத்து விட்டு, சம்பவ இடத்திலேயே கிருத்தி குமாரி உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு, சந்தேகப்படும் நபர் தப்பியோடியுள்ளார் என்று தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் கோரமங்களா போலீசார், தென்கிழக்கு பிரிவு டிஜிபி சாரா பாத்திமாவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிருத்தி குமாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இது குறித்து பேசிய டிஜிபி சாரா பாத்திமா, “குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கிருத்திகா குமாரி தங்கியிருந்த ஹாஸ்டலுக்குள் நுழைந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குற்றவாளி எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் ஹாஸ்டல் நன்கு பரிட்சயப்பட்டதைப் போல நேராக நுழைந்து, படியேறி 3வது மாடிக்கு சென்று கிருத்தி குமாரியின் அறைக்குள்ளும் சரியாக நுழைந்துள்ளார். கிருத்தி குமாரிக்கு நன்கு பரீட்சயமானவர் தான் இதை செய்திருக்க வேண்டும். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.” என்றார்.