பிரபல மாலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது!!

34

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ராஜாஜி நகரில் லுலு மால் உள்ளது. இந்த மாலில் இளம்பெண் ஒருவரை முதியவர் ஒருவர் நெருங்கி வந்து தகாத முறையில் தொடும் வீடியோ சமூக வலைதளங்களில் அக்.30-ம் தேதி வைரலானது.

இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பயனர், ” மாலில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அந்த முதியவர் இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டார்.

முதலில் நான் அவரை மிகவும் நெரிசலான பகுதியில் பார்த்த போது, அவர் மீது சந்தேகமாக உணர்ந்தேன். வீடியோ பதிவு செய்ய அவரைப் பின் தொடர்ந்தேன்.

அப்போது அவர் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டது பதிவானது. இதுகுறித்து மால் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் அந்த நபரைத் தேடிப்பார்த்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஆனால், அந்த முதியவரைக் காணவில்லை” எனப் பதிவிட்டிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து மாகடி சாலை போலீஸார் ஐபிசி பிரிவு 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மாலில் உள்ள சிசிடிவி காட்சிகளின்படி பல பெண்களிடம் முதியவர் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அஸ்வத் நாராயணா(60) என்ற ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் இன்று போலீஸில் சரணடைந்தார்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், வார இறுதி நாட்களில் கடைவீதியில் கூட்டத்தைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தகாத முறையில் அவர் தொடுவது வழக்கம் என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.