பிரபாகரனின் விதிமுறைகளில் இதுவும் ஒன்று – கருணா வெளிப்படை பேச்சு!

866

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் ஒருபோதும் இணைத்துக்கொள்ளவில்லை என்று கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வானொலி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் படையினரை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறித்து அந்த செவ்வியில் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது..

இதற்கு பதிலளித்து பேசியுள்ள அவர்,


“தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக்கொண்டமைக்கான வரலாறுகள் இல்லை. சிறுவர்களை படையின் இணைத்துக்கொள்ள கூடாது என்பது தலைவர் பிரபாகரனின் விதிகளில் ஒன்று.

அனைத்து வீரர்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், அதனை தலைவர் பிரபாகரன் கண்டிப்பாக பின்பற்றியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் சீருடையில் சிறுவர்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியிடப்படும் புகைப்படங்கள் மேடை நாடகங்களில் எடுக்கப்பட்டவையாகும்.

சிலர் நாடகங்களுக்காக தங்கள் குழந்தைகளை இவ்வாறு அலங்கரித்தனர். எனினும், அவை எவையும் உண்மையானவை அல்ல” என அவர் மேலும் கூறியுள்ளார்.