மகன் படித்த பள்ளிக்கு ஊதியம் வாங்காமல் கட்டட வேலை பார்த்த தந்தை… நெகிழ்ச்சி சம்பவம்!!

114

மதுரையில் மகன் படித்த பள்ளிக்கு ஊதியம் வாங்காமல் கட்டட வேலை பார்த்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழக மாவட்டமான மதுரை, எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து முடித்த மாணவனின் தந்தை அழகு முருகன். இவர், உத்தப்புரத்தைச் சேர்ந்த கட்டிட பணியாளர் ஆவார்.

இவரிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால், முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் கட்டட மராமத்து வேலைகளை பார்க்குமாறு கூறியுள்ளனர்.

பின்னர், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்கள் கட்டட வேலை பார்த்தார். இதையடுத்து, வேலைக்கான கூலியை அழகுமுருகனிடம் தலைமையாசிரியர் வழங்கினார்.

அதற்கு அவர் வேலைக்கான ஊதியத்தை வாங்காமல், பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இருக்கட்டும் என்று கூறி வாங்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து மாணவனின் தந்தை அழகு முருகன் கூறுகையில், “எனது மகன் இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தற்போது திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிக்கிறார்.


எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவியாக இருந்த இந்த பள்ளிக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன். அதனால், கூலி வாங்காமல் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இதேபோல ஆசிரியர் முருகேசன் கூறுகையில், “12 -ம் வகுப்பு படித்த மாணவன் பீமன் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்கள் ஆகியவை நட்டு வைத்தார். இதை அறிந்த தனியார் நிறுவனம் மாணவனின் உயர் கல்விக்கு ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளது” என்றார்.