மகளை கொலை செய்த மருமகனுக்கு மாமியாரால் நேர்ந்த கொடூரம்!!

357

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிவேல். இவருடைய மனைவி சரோஜா . இவர்களது மகள் பிரியா . இவருக்கு வயது 19. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் வசித்து வரும் பால் வியாபாரி தமிழரசனுக்கு தனது மகள் பிரியாவை திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

திருமணமான 3 மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் தமிழரசன் தனது மனைவி பிரியாவை அடித்துக்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனைகைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களிலேயே தமிழரசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில், தன் மகளை கொன்ற தமிழரசனை பழி வாங்குவதற்காக சரோஜா 3 மாதங்களாக காத்துக் கிடந்தார்.

மகள் இறந்ததும் மொட்டை அடித்த சரோஜா ஜனவரி 23ம் தேதி நேற்று முன்தினம் நள்ளிரவில் பேண்ட்டீ-ஷர்ட் அணிந்து கொண்டு கையில் அரிவாளுடன் தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த தமிழரசனை சரமாரியாக சரோஜா அரிவாளால் வெட்டினார். இதில் அவரது நடு மண்டை மற்றும் வலது கையில் பலமான வெட்டு விழுந்தது. அத்துடன் அவரது இடது கை விரல்கள் துண்டிக்கப்பட்டன.


தமிழரசனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த தமிழரசனின் தாயார் விமலா சரோஜாவை தடுக்க முயன்றார். இதனால் அவருக்கும் சில வெட்டுக்கள் விழுந்தன. தமிழரசன், விமலா ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு அத்தெருவில் வசித்து வந்தவர்கள் கூடிவிட்டனர். உடனடியாக அரிவாளால் வெட்டுப்பட்டு துடித்துக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தமிழரசன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரோஜாவை கைது செய்தனர். அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மகளைக் கொலை செய்த மருமகனை மாமியார் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.