மனைவியைக் கொலை செய்து பிணத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

352

தூத்துக்குடி….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54).

இந்த நிலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து இன்று காலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் இன்னாசிமுத்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருந்தது.

இதனால் இன்னாசிமுத்து வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட கிராம மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


அத்துடன் அக்கம் பக்கத்தினர், இன்னாசிமுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்த இன்னாசிமுத்து அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மனைவியைக் கொலை செய்து இன்னாசிமுத்து வீட்டில் பதுங்கியிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகமடைந்தனர்.

இந்த நிலையில், விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார், மருதம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருதம்மாள் எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரைக் கொலை செய்த இன்னாசிமுத்து எங்கே என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.