மின்சாரம் தாக்கி தனது தாயும், தந்தையும் உயிரற்ற சடலங்களாக விழுந்துக் கிடப்பதைப் பார்த்து மகள் கதறியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் பகுதியில், துணி காய வைத்துக் கொண்டிருந்த மனைவி, மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், காப்பாற்ற சென்ற கணவனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்தவர் ரத்தினமணி (48 ). பாடபுத்தகம், நோட்டுகள், எழுதுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி நீலா(46) நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கணவன், மனைவி காலை அலுவலகம் செல்வதற்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் பின்புறம் துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் இருந்த மின்கம்பியில் நீலாவின் கைகள் உரசிய நிலையில், மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்தார். இதை பார்த்த ரத்தினமணி உடனடியாக மனைவி நீலாவை தூக்கியுள்ளார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீண்ட நேரமாக பெற்றோரை காணாத அவரது மகள், வீட்டிற்கு சென்று பார்த்தபோது தாய் தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
உடனடியாக மகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இறந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.