முற்றிய யூடியூப் சண்டை.. நேரலையில் தற்கொலைக்கு முயன்ற ‘பிரியாணி மேன்’… நடந்தது என்ன?

199

யூடியூபர்கள் இர்பான் மற்றும் பிரியாணிமேன் அபிஷேக் ரபி ஆகியோர் இடையிலான விமர்சன பஞ்சாயத்து முற்றிப் போயிருக்கும் நிலையில், திடீரென பிரியாணி மேன் யூடியூப் லைவ்வில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இணையத்தை உலுக்கியெடுத்து வரும் சண்டையின் பின்னணி என்ன?

சர்ச்சைகளுக்கு நடுவே சப்ஸ்பிரைபர்களை பெருக்கிக்கொள்ளும் கலைக்குப் பெயர் தான் யூடியூப். அந்நியன்பட அம்பியாக மாறி ஒருவர் சர்ச்சை கேள்விகளை வன்மத்துடன் எழுப்ப, மற்றொருவர் அதற்கு காட்டமாக பதில் கூற என படிப்படியாக வளர்ந்த இந்த சண்டை தற்போது தமிழக யூடியூப் தளத்தை கலவரக்காடாக மாற்றியுள்ளது.

கோடிக்கணக்கில் செலவிட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கே அத்தனை கட்டுப்பாடுகள் இருக்கும் போது எல்லை மீறி நேரலையில் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி மிரட்டும் இதுபோன்ற யூடியூப்பர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது ஏன்?

யூடியூப் சேனல் நடத்தி அதில் புகழடைந்தவர்களில் இர்பானும் ஒருவர். 7 ஸ்டார் ஹோட்டல்கள் முதல், தள்ளுவண்டியில் விற்பனை செய்யும் உணவு வரை தரமான உணவு வகைகைகள் பற்றிய விமர்சனங்களை தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அது மட்டுமின்றி பிரபலங்களுடன் அமர்ந்து உணவு அருந்தும் இர்பானின் வீடியோக்களும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

இதேபோல பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அபிஷேக் ரபி, கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனங்களை முன்வைப்பது இவரது ஸ்டைல். செம்மொழி பூங்கா என்பது பாலியல் தொழில் செய்யும் இடம் என்று தொடங்கி இவர் செய்யாத சர்ச்சை விமர்சனங்களே இல்லை எனக் கூறலாம்.

இதேபோல் டெய்லர் அக்கா என அழைக்கப்படும் பெண் தயாளு டிசைன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் டெய்லரிங் கற்றுக் கொடுக்கும் இவர் சமீபத்தில் தான் டெய்லர் அக்கா என டிரெண்டிங் ஆனார். இவர்கள் மூவர் இடையிலான விமர்சனப் போர் தான் தற்போது பெரும் சர்ச்சையில் போய் முடிந்துள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் இர்பானின் கார் மறைமலைநகர் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மறைமலை நகர் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த காரை இர்பான் ஒட்டி வரவில்லை எனவும், அவரது உறவினர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும், இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “இர்பான் இப்போதும் மட்டும் அல்ல கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனால் அதிலிருந்து அவர் எப்படி சுலபமாகத் தப்பித்து விடுகிறார் என பேசியிருந்தார்.

மேலும் இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். அதுமட்டுமின்றி இர்பான் ரிவ்யூ செய்த ஹோட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

பிரியாணி மேன் சேனலில் வீடியோ வெளியாகி 1 மாதம் கழித்து, அவர் வெளியிட்ட வீடியோவிற்கு பதில் தரும் விதமாக ஜூலை 21ஆம் தேதி இர்பான் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “எந்த ஒரு ஆதராமும் இல்லாமல் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை பிரியாணி மேன் சுமத்துவதாக இர்பான் ஆதாரங்களுடன் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.

இர்பானை மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் டெய்லரிங் சொல்லித்தரும் டெய்லர் அக்கா என்பவரையும் விமர்சனம் செய்திருந்தார் பிரியாணி மேன். டெய்லரிங் என்ற பெயரில் ஆபாசமான உடைகளை அணிந்து வீடியோ பதிவிடுவதாக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.

இந்த பிரச்சனை ஒரு புறம் சென்றுக் கொண்டு இருக்க பிரியாணி மேன் தனது யூடியூப் சேனல் லைவ்வில் வந்து, தனது தற்கொலைக்கு ஜேசன் என்பவர்தான் காரணம் என்று கூறி விட்டு திடீரென துப்பட்டாவால் தூக்கிட்டுக் கொள்வது போல் தற்கொலை முயற்சியில் இறங்கினார்.

இதனை லைவ்வில் பார்த்துக் கொண்டு இருந்த அவரது நண்பர்கள் சிலர், பிரியாணி மேனின் தாயாருக்கு போன் செய்ததாகவும், அதன் பேரில் அவர் வந்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாகத் தற்கொலை செய்ய முயற்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி மையத்துக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை அரசு வழங்கி வருகிறது.

இந்தநிலையில் சுமார் 4 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வைத்திருக்கும் பிரியாணி மேன் யூடியூப் நேரலையில் வந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.