தமிழகத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள். இதனால் மாணவர்கள் வீடுகளில் தங்காமல் சுற்றித் திரிகின்றனர். சில நேரங்களில் அபாயங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் ராணிப்பேட்டையில் குட்டை, ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை உட்பட 4 பேர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியில் வசித்து வருபவர் 45 வயது பரமசிவம்.
இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி தனியார் கம்பெனி ஊழியர். இவர்களது மகன்கள் 11 வயது தினேஷ், 9வயது ரஞ்சித், 10 வயது மகள் சுப்ரியா.
இவர்கள் வீட்டின் அருகே உள்ள மீன்கள் வளர்க்கும் குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். புகாரின்பேரில் நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சி மணல்மேடு கிராமத்தில் வசிப்பவர் வெற்றி வீரன்.இவரது மகன் 9 வயது மாவீரன் . அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மகன் சக்தி இருவரும் காரைமேடு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர்.
இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் திருவாலி ஏரிக்கு சென்றுள்ளனர். ஆடைகளை அவிழ்த்து கரையில் வைத்து விட்டு குளித்தபோது ஏரியில் மண் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கினர். மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் ஏரியில் வலை வீசி தேடிய போது இரு சிறுவர்களின் சடலமும் சிக்கியது.
அதே போல் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சி சின்னக்களத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன்- ரம்யா தம்பதியர். இவர்களுக்கு 6 வயதில் கிருஷ்மிதா என்ற மகளும், 2 வயதில் தர்ஷித் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று காலை தர்ஷித் அருகில் வசிக்கும் அபிலன் மகன் மயிலனுடன் சிறிய சைக்கிளில் சாலையில் விளையாடிக்கொண்டு இருந்தான். இருவரும் அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சைக்கிளுடன் சென்றனர்.
அங்குள்ள 5 அடி ஆழ தொட்டிக்கு அருகே தண்ணீர் பாட்டிலை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது பாட்டில் தவறி விழவே அதை எடுக்க முயற்சி செய்த தர்ஷித் உள்ளே விழுந்துவிட்டான். 10 இஞ்ச் சுற்றளவு கொண்ட குழாயில் அவனை தண்ணீர் இழுத்து சென்றுவிட்டது. பெற்றோர் தேடி வந்தபோது தொட்டியில் தர்ஷித் விழுந்தது தெரிய வந்தது.
தீயணைப்பு படையினர் வந்து தொட்டியில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் குழாயை பொக்லைன் இயந்திரம் மூலம் 8 இடங்களில் உடைத்து அதிநவீன லைட் மூலம் பார்த்தனர்.
200 மீட்டர் தூரத்தில் சின்னக்களத்துபட்டி சேப்பளாப்பட்டி மெயின் ரோட்டின் அருகே 5வது குழியில் உள்ள குழாயில் தர்ஷித் சடலம் சிக்கி இருந்தது தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தில் வசித்து வருபவர் 37 வயது செல்வக்குமார்.
இவரது 2வது மகன் நித்திரன் வீட்டில் இருந்த 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டான். அலறித்துடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் ஏற்கனவே நித்திரன் மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.