வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த சிறுவன்!!

411

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சிஞ்சப்பன்பட்டியில் வசித்து வருபவர் அமுதவல்லி. இவரது கணவர் வேந்தராஸ் . இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அமுதவல்லி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்,

கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கிராமத்து வீட்டை பூட்டிவிட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவருடைய மகள் ரம்யாவின் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று அமுதவல்லியின் வீட்டிற்குச் சென்ற 2 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று திருட முயற்சித்தனர். இதனைக் கண்ட அக்கிராம மக்கள் வீட்டுக்குள் இருந்தவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.

அந்த சமயத்தில் ஒரு இளைஞர் தப்பிச்சென்ற நிலையில் மற்றொரு சிறுவனை மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னர் அந்த சிறுவனை ஊரின் நடுவே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,


சிறுவனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் தப்பியோடியவரையும் மிகத் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப் பகலில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.