தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடனே கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பெயரில் வந்த பார்சலில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பிடிபட்டது. இந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியது.
இந்த விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷ் என்ற முன்னாள் அரசு பெண் அதிகாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இதில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாகவும், சரக்கு விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாகவும் ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், தங்கம் கடத்துவது துணைத் தூதருக்கு தெரியும். ஒரு கிலோ தங்கம் கடத்த அவருக்கு 1,000 டொலர் வழங்குவோம். முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் என் நல்ல நண்பர் மட்டுமே என்று கூறியுள்ளார். அதே சமயம் சிவசங்கரனுக்கும் தங்கம் கடத்தலுக்கும் பங்கு உள்ளதா என்ற கேள்விக்கு ஸ்வப்னா வெளிப்படையாகப் பதிலளிக்கவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக, சுங்கத்துறை, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், றமீஸ் உள்ளிட்ட சிலரிடம் என்.ஐ.ஏ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் வளைத்து வளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்வப்னாவுடன் நட்பில் இருந்த முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது, இவரிடம் வரும் திங்கட் கிழமை விசாரணை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.