நாகப்பட்டினம்….
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் வசித்து வருபவர் எம்.கே. ராஜ்குமார் .இவர் விவசாயத்தொழில் புரிந்து வருகிறார். இவர் நடப்பாண்டில் சுமார் 15 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.
ஆனால் கர்நாடகத்திலிருந்து இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் நீர்வரத்து சரியாக இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
அதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 6000 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகத் தொடங்கின. பல ஆயிரம் ஏக்கரில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் குருவை சாகுபடி நாசமாகியுள்ளது.
விவசாயி ராஜ்குமாரின் குருவைப் பயிரும் முற்றிலுமாக கருகிவிட்டது. இன்று காலை வழக்கம்போல் வயலுக்கு சென்ற அவர், காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்து சம்பா சாகுபடிக்கான நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்.
அந்த சமயத்தில் சோகம் தாங்காமல் திடீரென நெஞ்சுவலி வந்து வயலிலேயே மயங்கி விழுந்தார். அவரை சக விவசாயிகள் மீட்டு திருக்குவளையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகுபடி பொய்த்துப் போனதால் விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.