புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளம் நம்புனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பொற்பனையான் (31). இவரின் மனைவி பிரியங்கா (23). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது.
பொற்பனையானுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால், பொற்பனையான் தினமும் மது அருந்திவிட்டு வருவதாகவும், பிரியங்கா கொண்டுவந்த நகைகளைக் குடிப்பதற்காகவே விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாள்களாகவே பிரியங்கா மன வேதனையில் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில்தான், வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, வீட்டுக்கு அருகே இருக்கும் சிறு கொட்டகையில் பொற்பனையானும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்திருக்கிறார்.
முதலில் பிரியங்கா தூக்கில் தொங்கியதாகவும், இதைப் பார்த்து அதிர்ந்த பொற்பனையான் அடுத்த சில நிமிடங்களிலேயே தூக்கில் தொங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இது பற்றி அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்குடி டி.எஸ்.பி தீபக் ரஜினி உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, இறந்த தம்பதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். குடும்பப் பிரச்னையால், கணவன், மனைவி இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவரங்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.