தங்கையை காதலித்து திருமணம் செய்து விட்டு அவன் இப்படி செய்யலாமா? வாலிபரின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

955

தமிழகத்தில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர், காதல் திருமணம் செய்து விட்டு, தங்கையுடன் வாழ மறுத்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (52). இவருடைய மனைவி முத்துப்பேச்சி (42). இவர்களுக்கு விக்னேஷ்ராஜா (21) என்ற மகன் உள்ளார். இன்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர், அருகில் இருக்கும் பொட்டர் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகள் சங்கீதா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து இந்த தம்பதி கடந்த மாதம் 17-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மனைவியின் வீட்டில் வசித்த விக்னேஷ்ராஜா தன்னுடைய மனைவியிடம் வரதட்சணை கேட்டது தொடர்பான பிரச்சனையில், பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2-ஆம் திகதி இரவில் 3 பேர் கொண்ட கும்பல், சிவகளையில் சென்று விக்னேஷ்ராஜா, அவருடைய உறவினர் அருண் (21), விக்னேஷ்ராஜாவின் தந்தை லட்சுமணன், தாய் முத்துப்பேச்சி ஆகிய 4 பேரை அரிவாளால் வெட்டியது.


இதில் பலத்த காயம் அடைந்த அருண், முத்துப்பேச்சி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த விக்னேஷ்ராஜா, லட்சுமணன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (24), உறவினர்களான மீனாட்சிசுந்தரம் மகன் முத்துச்சுடர் (21), திருவேங்கடம் மகன் அருணாசலம் (34) ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண், முத்துப்பேச்சி ஆகியோரை கொலை செய்ததும், விக்னேஷ்ராஜா, லட்சுமணனை வெட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர். கைதான முத்துராமலிங்கம் என்பவர் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என்னுடைய தங்கை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்த விக்னேஷ்ராஜா எங்களுடைய வீட்டில்தான் வசித்து வந்தார்.

எனினும் அவர் சங்கீதாவிடம் வரதட்சணையாக நகைகளை கேட்டு பிரச்சினை செய்தார். நகைகளை கொடுக்காததால், விக்னேஷ்ராஜா தனியாக அவரது வீட்டுக்கு சென்று விட்டார். எங்களது சம்மதம் இல்லாமலே காதலித்து திருமணம் செய்து விட்டு, பின்னர் வரதட்சணை கேட்டு பிரச்சினை செய்து, தங்கையுடன் வாழ மறுத்து பிரிந்து சென்றதால், விக்னேஷ்ராஜாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம்.

இதை தடுக்க முயன்ற அருண், லட்சுமணன், முத்துப்பேச்சி ஆகியோரையும் வெட்டினோம். இதில் அருண், முத்துப்பேச்சி ஆகிய 2 பேரும் உயிரிழந்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.