திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில், 2வது திருமணம் செய்த விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் விளக்கிலிருந்த தீ பரவியதில் அவர் எரிந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் சுரேஷ் (40).
இவரது மனைவி பார்வதி (36). 15 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறிக்கடை வைத்துள்ளார்.
இந்தநிலையில் திருவள்ளூர் கம்பர் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீடான புல்லரம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்.
அப்போது ராஜேஸ்வரிக்கும், சுரேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி புட்லூர் அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த சுரேஷின் முதல் மனைவி பார்வதி, தனது கணவருடன் தகாத உறவில் உள்ள ராஜேஸ்வரியை காய்கறிக் கடைக்கு வரக்கூடாது என தகராறு செய்து அனுப்பி விட்டதாக தெரிகிறது.
ஆனால் சுரேஷின் காய்கறிக் கடையை ராஜேஸ்வரி கவனித்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பார்வதி, கடந்த 9ம் தேதி காலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திருவள்ளூர் மார்க்கெட் பகுதிக்கு வந்து, காய்கறிக் கடையில் இருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றினார்.
அப்போது பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீப்பற்றியது. தீ மளமளவென பற்றியதையடுத்து ராஜேஸ்வரி கதறினார். அவர் தீயில் எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் சுரேஷின் மனைவி பார்வதி மற்றும் அவரது உறவினர்கள், காய்கறி கடைக்குள் வேகமாக வருவதும், பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றுவதும், பின்னர் ராஜேஸ்வரிக்கு பின்னால் சுவரில் சுரேஷின் தந்தை படத்தின் முன்பு ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கிலிருந்து தீப்பற்றி ராஜேஸ்வரி உடல் முழுவதும் எரியும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதில் உடல் முழுவதும் 80 சதவீத தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக சுரேஷ் (40), சுரேஷின் மனைவி பார்வதி (36), உறவினர்கள் விஜயா (55), மோகன் (28), முரளி (34), நதியா (33), லட்சுமி (32), சங்கர் (40) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் ராஜேஸ்வரியை பார்வதி பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீப்பொறி பரவி ராஜேஸ்வரி எரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கொலை வழக்காக இதனை மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.