4 வயது தத்து மகளுக்கு மருத்துவ தம்பதி செய்து வந்த கொடுமை.. கதறித் துடித்த பரிதாபம்!!

446

அசாம் மாநிலத்தில்..

பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்கள் மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அசாமில் நடந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது பெண் குழந்தையை அவர்களது பெற்றோர் கொடுமைப்படுத்திய சம்பவம் அசாம் மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரில், கணவன், மனைவி என இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். கவுகாத்தியில் வசித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான், அந்த குழந்தையை அவர்கள் தத்தெடுத்துள்ளனர். மொட்டை மாடியில் கடும் வெயிலுக்கு மத்தியில் அக்குழந்தை தூணில் கட்டிவைக்கப்பட்டுள்ளது.


அதனை புகைப்படமாக எடுத்த, மருத்துவர்களின் அண்டை வீட்டார், காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதையடுத்து, இந்த சம்பவம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்து தம்பதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

இரைப்பை குடல் மற்றும் மேம்பட்ட பொது அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வாலியுல் இஸ்லாம், கவுகாத்தியின் மணிப்பூரி பஸ்தி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மனநல மருத்துவரான அவரது மனைவி சங்கீதா பருவா, மேகாலயாவின் ரிபோய் மாவட்டத்தில் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கொலை முயற்சி (307), கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் (325) உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல பிரிவுகளின் கீழ் தம்பதியினர் மீது போலீஸார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில்,

“முதற்கட்ட விசாரணையில், டாக்டர் பருவா அந்த சிறுமியை சூடான இரும்பு கம்பியால் அடித்ததையும், குழந்தையின் உடலில் வெந்நீரை ஊற்றுவதையும் கண்டறிந்தோம். விசாரணையில் பாருவா தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

அந்தத் தம்பதியின் வீட்டு உதவியாளரையும் விசாரணை செய்தோம். சொன்னதை கேட்காததாலும், குறும்பு தனமாக நடந்து கொண்டதாலும் அதற்கு தண்டனையாக அந்த சிறுமியை கட்டி வைக்கச் சொன்னதாக வீட்டின் உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த தம்பதி, சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை தத்தெடுத்தனர். கடந்த காலங்களில் கூட, குழந்தையை கொடுமைப்படுத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை” என்றார்.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் மிகுவல் தாஸ் கூறுகையில், “மருத்துவ தம்பதிகள் தங்களின் வளர்ப்பு மகளை துன்புறுத்துவதாகமுன்னர் புகார்கள் வந்தன. இருப்பினும், தம்பதியரால் குழந்தை துன்புறுத்தலுக்கு உள்ளான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.