கள்ளக்காதலால் கொல்லப்பட்ட மூதாட்டி… பெண்ணுடன் போலீஸில் சிக்கிய நபர்!!

343

தமிழகத்தில்..

நாகை கீரைக்கொல்லைத் தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவம், நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இச்சம்பவம் குறித்து புதுச்சேரியில் உள்ள மூதாட்டியின் இரண்டாவது மகன், தனது தாயார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின்பேரில் நாகை நகர இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான தனிப்படை போலீஸார், கொலை நடந்த வீடு மற்றும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணையை நடத்தினர்.

விசாரணையில் மூதாட்டியின் வீட்டிற்கு ஒரு தம்பதி வந்ததாக அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை போலீஸார் மூதாட்டியைக் கொலைசெய்து விட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க தீவிர விசாரணையில் இறங்கினர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அப்போது வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த, தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை உதயடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளிமுத்து என்ற பெண் ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மூதாட்டி சரோஜாவை அவரின் தூரத்து உறவினரான தஞ்சை உதயடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் கொலைசெய்திருக்கிறார்.

காளிதாஸுக்கும், அவரின் அண்ணன் மனைவி வள்ளிமுத்துவுக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்திருக்கிறது. சம்பவ தினத்தன்று, நள்ளிரவு நேரத்தில் காளிதாஸும், வள்ளிமுத்துவும் மூதாட்டி சரோஜாவின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.

அப்போது பெண்ணுடன் வந்ததை ஏற்காமல், மூதாட்டி சரோஜா காளிதாஸை கண்டித்திருக்கிறார். அதனால் இருவரும் மூதாட்டியுடன் வாக்குவாதம் செய்திருக்கின்றனர்.

ஒருகட்டத்தில் மூதாட்டி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த காளிதாஸ், மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கியிருக்கிறார். அவருக்கு உதவியாக வள்ளிமுத்து மூதாட்டியின் காலை பிடித்துக் கொள்ள, சிறிது நேரத்திலேயே சரோஜா உயிர் பிரிந்துள்ளது.

இதையடுத்து மூதாட்டியின் கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகளை திருடிக் கொண்டு ஒன்றும் தெரியாததுபோல் இருவரும் அங்கிருந்து அதிகாலை நேரத்தில் தப்பிச் சென்றது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து மூதாட்டியைக் கொலைசெய்த காளிதாஸ், வள்ளிமுத்து ஆகியோரிடமிருந்து 1.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூதாட்டியின் தங்க செயின், தோடு ஆகியவற்றை பறிமுதல் செய்த நாகை தனிப்படை போலீஸார், இருவரையும் கைதுசெய்தனர்.