கள்ளக்காதலியின் பேச்சைக் கேட்டு மனைவியைக் கொன்ற கணவன் : தொடரும் கள்ளக்காதல் விபரீதங்கள்!!

2423

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர்(40). பந்தல் அமைக்கும் தொழிலாளியான இவருக்கு தேவி (35) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்சன் (8) என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள மாத்தினிபட்டியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணான சரோஜா (30) என்பவருக்கும், ராஜசேகருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இவர்களது கள்ளத்தொடர்பு தேவிக்கு தெரிந்த நிலையில், தனது கணவர் ராஜசேகரை கண்டித்தார். சரோஜாவுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு தேவி பலமுறை வலியுறுத்தினார். இருப்பினும் ராஜசேகர் தனது மனைவி பேச்சை கேட்காமல், கள்ளக்காதலி சரோஜாவை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக கடந்த மாதம் மீண்டும் ஏற்பட்ட தகராறில், கணவரிடம் கோபித்து கொண்டு தனது 3 மகன்களுடன் குஜிலியம்பாறை அருகே அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தேவி சென்று விட்டார். இதனையடுத்து ராஜசேகர் அரண்மனையூருக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பலமுறை தேவியை அழைத்தார். இருப்பினும் ராஜசேகருடன் தேவி செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி ராஜசேகர், மீண்டும் அரண்மனையூருக்கு சென்றார். தேவியின் தாயார் தங்கம், தோட்ட வேலைக்கு சென்றிருந்தார். 3 குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், தனது மனைவி தேவியின் தலை முடியை பிடித்து ஜன்னல் கம்பியில் முகத்தை அடித்து சுவரில் மோதினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த தேவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

பின்னர் தனது 3 மகன்களையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பூத்தாம்பட்டிக்கு சென்றார். அங்கு தனது குழந்தைகளை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு மாத்தினிப்பட்டிக்கு ராஜசேகர் சென்றார். அங்கு கள்ளக்காதலி சரோஜாவை ராஜசேகர் சந்தித்து, தனது மனைவியை கொலைச் செய்தது குறித்து அவரிடம் தெரிவித்தார்.

அதன்பிறகு அவர்கள் 2 பேரும் திருச்சிக்கு சென்று தலைமறைவாகி விட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து, எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர், சரோஜா ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இரு தரப்பு உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திருச்சியில் அவர்கள் பதுங்கி இருந்த இடம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்தனர்.

பின்னர் அங்கு பதுங்கி இருந்த ராஜசேகர், அவரது கள்ளக்காதலி சரோஜா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான ராஜசேகர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய மனைவி தேவி உயிரோடு இருந்தால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்று சரோஜா அடிக்கடி கூறி வந்தார்.

மேலும் அவரை கொலைச் செய்து விட்டால், நாம் சந்தோசமாக இருக்கலாம் என்று அவர் கூறினார். இதனால் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மனைவியை கொன்ற வழக்கில் கள்ளக்காதலியுடன் கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் எரியோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.