குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காமல் இறந்து போன 5 வயது சிறுமி! வறட்சியில் வாடும் ராஜஸ்தான் கிராமங்கள்!

106

ராஜஸ்தான்……..

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் தனது பாட்டியுடன் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்து வந்த 5 வயது சிறுமி, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் இறந்து போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் ராணிவாடாவில் உள்ள ஒரு வறண்டுபோன பாலைவன கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் சூடான மணல் திட்டுகளுக்கு நடுவில் நேற்று ஆடு மேய்ப்பவர் ஒருவர் எதிர்ச்சியாக பார்த்தபோது, 5 வயது குழந்தை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

குழந்தைக்கு அருகில் அவரது பாட்டி மயக்கமடைந்து கிடந்துள்ளார். இதனை அந்த ஊர் தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அங்கு உதவிக்காக கூடிய மக்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் அந்த வயது முதிர்ந்த பெண் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தனது சகோதரியைச் சந்திக்க, தனது ஐந்து வயது பேத்தியுடன் நடந்து சென்ற நேரத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சுகி எனும் அந்த பெண் நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். அதே நீரிழப்பின் காரணமாகவே சிறுமி இறந்துள்ளார் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மனநல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் நம்ரதா வர்ஷ்னி என்டிடிவிக்கு அளித்து பேட்டியில், விசாரணையில் குழந்தை தனது பாட்டியுடன் தனியாக வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது என கூறினார்.

“குழந்தையின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள குடும்பத்தை விட்டு வெளியேறினார். சுகி ஒரு NFSA பயனாளி, ஆனால் இப்போது சில மாதங்களாக அவர் இலவச ரேஷன்களை வாங்கவில்லை” என்று அவர்கள் மேலும் கூறினர்.

பாட்டி சில சமயங்களில் உணவுக்காக பிச்சை எடுப்பார், சில சமயங்களில் அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இருவரும் ஏற்பட்ட இந்த நிலைமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு ‘ஜல் ஜீவன் மிஷன்’ எனும் திட்டத்தின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் முலம் இலவச குடிநீர் வழங்கட்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.