சகோதரருக்கு கடைசியாக… சடலத்தையாவது மீட்டுத் தாருங்கள்: இளம்பெண் வைத்த கண்ணீர் கோரிக்கை!!

771

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பலால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில் அவரது சகோதரி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

சடலத்தை அங்குள்ள பாண்டு ஆற்றில் வீசியதாக கைதானவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து பொலிசார் தேடி வருகின்றனர். இதனிடையே, பொலிசாருக்கு எதிராக கடும் விமர்சனங்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்வைத்துள்ளனர்.

கடத்திச் சென்று கொல்லப்பட்ட சஞ்சீத் யாதவின் சடலத்தையாவது பொலிசார் மீட்டுத்தர வேண்டும் எனவும், கடைசியாக தமது சகோதரரின் கைகளில் பாசத்தின் அடையாளமாக தனக்கு ராக்கி கட்ட வேண்டும் என சகோதரி ருச்சி யாதவ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சஞ்சீத் யாதவ் கடத்தப்பட்ட பின்னர் அவரை உயிருடன் மீட்டுவருவதாக உறுதி அளித்தவர்களுக்கு அதை நிறைவேற்ற முடியாமல் போனது. அவர்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், எனது சகோதரரின் சடலத்தையாவது மீட்டுத் தாருங்கள் என்றார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஒரு மாதம் முன்பு திடீரென்று ஒரு நாள், சஞ்சீத் யாதவ் மாயமானார். தொடர்ந்து குடும்பத்தினர் பொலிசாரை நாடியிருந்தும் விசாரணை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், சஞ்சீத் யாதவ் தங்கள் வசம் இருப்பதாகவும், பணையத் தொகையாக 30 லட்சம் பணம் வேண்டும் எனவும் ஒரு கும்பல் கோரிக்கை வைத்தது. இதனையடுத்து பொலிசாரின் ஆலோசனையின் அடிப்படையில், அந்த கும்பலுக்கு பணம் தர சஞ்சீத் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

குறிப்பிட்ட நாளில் பொலிசாரின் முன்னிலையில், அந்த கும்பல் பணத்தைப் பெற்றுக் கொண்டாலும், பொலிசாரால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாமல் போனது. பொலிசாருக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகைகள் குற்றம் சாட்டின. இதனையடுத்து, உயரதிகாரிகள் தலையிட்டு, இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க முடிவு செய்தனர்.

தொடர்ந்து, சஞ்சீத்தின் நண்பர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வரை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பாண்டு ஆற்றில் சடலத்தை பொலிசார் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றவும் இல்லை என தெரியவந்துள்ளது.