தந்தையின் சிறு வயது ஆசையை 73 வயதில் நிறைவேற்றிய பிள்ளைகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

1009

நாமக்கல்..

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரைச் சேர்ந்தவர் வரதராஜன். 73 வயதுடைய இவர், TVS நிறுவனத்தில் ‘பார்சல்’ லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சாந்தி, ஹாமலா, சங்கீதா, ஷோபனா என 4 மகள்களும், செந்தில்நாதன் என்ற மகன் என 5 பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில், முதியவருக்கு 8 பேரகுழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு முதாயவரின் மனைவி இறந்ததையடுத்து தனது மகன் செந்தில்நாதனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது பேரக்குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்த முதியவர், அவர்களிடம் ‘தனக்கு சிறு வயதில் காத்து குத்தவே இல்லை’ என்று விளையாட்டாக கூறியிருக்கிறார். இதனை கேட்ட அவரது மகள்கள் தனது தந்தைக்கு காது குத்தி அவரது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சேந்தமங்கலம் அருகே நைனாமலை பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து முதியவர் வரதராஜனுக்கு நேற்றைய முன்தினம் மொட்டை அடித்து, காது குத்தப்பட்டது. இந்த விழாவில் மகன், மகள்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து முதியவர் வரதராஜன் கூறுகையில், ‘சிறு வயதில் எனக்கு காது குத்த வைத்திருந்த தோடு, துணிகள் திருடு போனது. தாயும் இறந்து விட்டதால், காது குத்தாமல் விட்டு விட்டனர். இது என் மனதில் நீண்ட நாட்களாக பெரும் குறையாகவே இருந்தது.

அதை தற்போது என் மகள்கள் நிறைவேற்றியுள்ளனர். இந்த நிகழ்வால், நான் குழந்தையாகவே உணர்கிறேன். வயதான பெற்றோர்களின் தீராத ஆசைகளை, பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும்.” என்றார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.