தமிழகத்தில்..
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆண்டலாம் பேட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கொத்தனார் பணி செய்து வரும் இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த சந்தியா (22) என்பவரைக் காதலித்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து, சந்தியாவின் பெற்றோர் கடம்பங்குடிக்கு சென்று விட்டனர். காதல் திருமணம் செய்த தம்பதியருக்கு தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளன.
இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகின்றது.இதற்கிடையே, நேற்று (செப் 23) அதிகாலை சந்தியா தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும்,
உடனடியாக அவரை கும்பகோணம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்ததாகவும், அங்கு அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
மேலும், சந்தியா உடலை வீட்டிற்குக் கொண்டு வந்த பிறகு, சந்தியாவின் பெற்றோருக்குச் சந்தியா நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்து விட்டதாகத் தகவல் தந்ததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடம்பங்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு சென்ற நிலையில், சந்தியாவின் பெற்றோர்களிடம் ஆண்டலாம் பேட்டை பகுதி மக்கள், சந்தியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர்.
ஆனால், சந்தியாவின் புகுந்த வீட்டினரோ, சந்தியாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.இந்த நிலையில், சந்தியாவின் உயிரிழப்பை ஏற்க முடியாத அவரது பெற்றோர்கள், சந்தியா தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளதாகக் கூறி திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, போலீசார் ஆண்டலாம் பேட்டையிலிருந்த சந்தியாவின் உடலைக் கைப்பற்றி, சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி இரு ஆண்டுகளில் ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் ஆண்டலாம் பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.