தூக்கில் தொங்கிய நிலையில் பெண் மீட்பு… மரணத்தில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல்!!

1176

உளுந்தூர்பேட்டை..

உளுந்தூர்பேட்டையில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறி பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த மணிகண்டன். இவர் தனது மனைவி ரேவதி (24), மகள்கள் ஜெயவர்ஷினி (4), யாழினி (2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்துவிட்டு ரேவதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ரேவதி தனது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மிட்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தங்களுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தங்களது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என ரேவதியின் தந்தை வேல்முருகன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்..

இதனால் சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண் மரணம் குறித்து கோட்டாச்சியர் விசாரணை மேற்க்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இதனால் ரேவதியில் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் 2 நாள் வரை மருத்துவமனையில் காத்திருந்தும் காவல்துறை தரப்பிலோ, கோட்டாச்சியர் விசாரணையையோ நடத்தப்படாமல், உடல் பிரேத பரிசோதனை கூட செய்யாமல் தங்களை அலைக்கழிப்பதாக கூறி பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனை முன்பு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.

பெண்ணை பறிக்கொடுத்த பெற்றோர் சாலையில் உருண்டு பிரண்டு அழுத சம்பவம் சாலையில் சென்றவர்களை கண்கலங்க செய்தது. தங்களது பெண்ணின் மரணத்திற்கு கோட்டாச்சியர் தலைமையில் உரிய விசாரணை மேற்க்கொள்ள வேண்டும், ரேவதியின் உயிரிழப்பு காரணமான அவரது கணவர் மணிகண்டனை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்மாவை அப்பா கழுத்தில் துணியால் நெறித்தாக ரேவதியின் மூத்த மகள் ஜெயவர்ஷினி பேசிய வீடியோ வெளியாகியுள்ளதால் அதனை கொண்டும் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.