பெண் என்பதில் சந்தேகம்… உலகப் புகழ்பெற்ற வீராங்கனைக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு!!

117

ரஷ்யா…….

ரஷ்யாவில் பெண் என்பதை நிரூபிக்க கோரியதுடன், விமான பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற பளுதூக்கும் வீராங்கணையிடம் மன்னிப்பு கோரியுள்ளது விமான சேவை நிறுவனம் ஒன்று.

ரஷ்யாவின் Krasnodar நகரத்தை சேர்ந்தவர் 42 வயதான அன்னா துரேவா. உலகப் புகழ்பெற்ற பளு தூக்கும் வீராங்கனையான இவர் சொந்த நாட்டுக்காக பல முறை தங்கம் வென்றுள்ளதுடன் பல சாதனைகளையும் பதிவு செய்துள்ளார்.

இவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ரஷ்யாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இவர் தலைநகர் மாஸ்கோ வழியாக தமது சொந்த நகரமான Krasnodar-கு விமானம் மூலம் செல்ல திட்டமிட்டு முன்பதிவும் செய்துள்ளார். ஆனால் சம்பவத்தன்று, அந்த விமான சேவை நிறுவன ஊழியர்களுக்கு அன்னா பெண் என்பதில் சந்தேகம் ஏற்பட்டதுடன்,

எஞ்சிய பயணிகள் முன்னிலையில் அவமானப்படும் வகையில் பெண் என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் தம்மை மொத்தமாக உலுக்கியது என கூறும் அன்னா துரேவா, யார் முன்னிலையிலும் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் தாம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டே, தம்மை ஒரு தன்பால் ஈர்ப்பாளராக பிரகடனப்படுத்திக் கொண்ட அன்னா,

அந்த விமான ஊழியர்களிடம் தமக்கான விளக்கத்தை பொறுமையாக எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் பலமுறை கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே, அன்னா அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

தமது இளமை காலம் முழுவதும் நாட்டுக்காக ரத்தமும் வியர்வையும் சிந்திய ஒருவரிடம் இவ்வாறு நடந்து கொள்வது உண்மையில் பொருத்தமானதா என கேள்வி எழுப்பியுள்ள அன்னா துரேவா,

குறித்த தனியார் விமான சேவை நிறுவனம் தம்மிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இந்த நிலையில், அந்த விமான சேவை நிறுவனம் அன்னாவின் மன்னிப்பு கோரியதுடன், இது போன்ற நிலை இனி ஏற்படாது எனவும் உறுதி அளித்துள்ளனர். பளு தூக்கும் போட்டிகளில் மொத்தம் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அன்னா துரேவா தற்போது இளம் தலைமுறைக்கு பயிற்சி அளித்து வருகிறார்.