மகன் இறந்த பிறகு மருமகளின் மறுமணத்துக்காக புதிய மகனைத் தத்தெடுத்த பெண் : நெகிழ்ச்சிக் கதை!!

54

குஜராத்தில்..

மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா பட்டிடார் சமூகத்தை சேர்ந்த ஈஷ்வர்பாய் பிமானியின் மகன் சச்சின். 35 வயதாகும் இவர், தன் மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில் பால் கறந்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரது மரணம் மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்தது.

சச்சினின் மனைவி மித்தல் இந்த சம்பவத்துக்குப் பின் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக, சமூக கட்டமைப்புகளுக்குட்பட்டு தன் மருமகளின் வாழ்க்கை குறித்தும் அவர், சிந்திக்க வேண்டியிருந்தது.

தன் கணவரின் இழப்பு குறித்து பேசும்போது, “எங்களுக்கு 2010ல் திருமணம் நடந்தது. 12 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்ந்தோம். 2012ல் தான் எங்கள் முதல் குழந்தை த்யான் பிறந்தான். நானும் சச்சினும் தினமும் கால்நடைகளுக்கு தீவனம் வைப்போம்.

அதே மாதிரிதான் அன்றும் வேலைகளை முடித்துவிட்டு பால்கறந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஷாக் அடித்து கீழே விழுந்தார். உடனடியாக உயிர் போய்விட்டது. அந்த சமயத்தில் என்னால எதுவுமே செய்ய முடியவில்லை” என்று உடைந்து அழுகிறார் மித்தல்.

இனி தன் மாமியாருடனும் குழந்தைகளுடன் தன் மீத வாழ்வைக் கழிக்க முடிவு செய்தார் மருமகள் மித்தல். ஆனால், மாமியாரான ஈஷ்வர்பாய் மனதில் மித்தலுக்காக வேறொரு எண்ணம் இருந்தது.

ஒரு மகனை தத்தெடுத்து என் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்து என் குடும்பத்தின் நிலையை பழையபடிக்கு கொண்டுவர ஏன் நான் சிந்திக்கக் கூடாது என்று எண்ணினார் ஈஷ்வர்பாய். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த மித்தல், பின்னர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, 35 வயதான யோகேஷ் தத்தெடுக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து பிபிசியுடன் பேசிய மித்தலின் உறவினர் விஷன்ஜி பகத், “மித்தல் வாழ்க்கைக்காக நாங்கள் இரண்டு மூன்று வழிகளை யோசித்தோம் குழந்தைகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடியுமா? இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன செய்வது என்றும் கூடயோசித்தோம். கடைசியாகத்தான் இந்த முடிவுக்கு வந்தோம்” என்று தெரிவிக்கிறார்.

வளர்ந்தவர்கள் உளவியல் ரீதியாக தன் சொந்த பெற்றோருடன் அதிக பாசத்துடன் இருப்பர். எனவேதான், குழந்தைகளை தத்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த விவகாரம் சற்று வித்யாசமானது. இப்படியொரு சம்பவம் இதுவரை கடுவா பட்டிடார் சமூகத்தில் நடந்ததே இல்லை. ஆனால், சமூகம் மற்றும் இரண்டு குடும்பங்களின் ஆதரவுடன் அனைத்தும் சுமுகமாகவே நடைபெற்றன.

இந்த தத்தெடுப்பு நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த கிராமமும் திரண்டிருந்தது. காரணம், தன் குடும்பத்துடன் அனைத்து தொடர்புகளையும் அறுத்துக்கொண்டு ஒருவர் கிட்டத்தட்ட துறவறம் போவதற்கு இணையாக தயாராக வேண்டும். யோகேஷ் அதற்கு தயாரானர்.

மகளை திருமணத்துக்குப் பின் வழியனுப்பும் நிகழ்வு போல, தங்கள் ஊரின் மகனை வழியனுப்ப அவ்வளவு பேரும் திரண்டிருந்தனர். இறுதியில் யோகேஷின் பெற்றோர் சம்மதத்துடன் நெற்றியில் திலகமிட்டு தன் மகனாக யோகேஷை ஏற்றுக்கொண்டார் ஈஷ்வர்பாய்.

சொந்த ஊருக்கு திரும்பி வந்த பிறகு, கங்காபர் கிராமத்தில் இருந்த லக்ஷ்மிநாராயணன் கோயிலில் யோகேஷுக்கும் மித்தலுக்கும் திருமணம் நடைபெற்றது.

“கல்யாணத்துக்கு பிறகு, நான் மித்தலோடு அங்கேயே தங்க வேண்டும் என்றார்கள். அப்படியென்றால் நான் என் குடும்பத்தை பிரிய வேண்டும். 35 வயதுக்கு பிறகு இதெல்லாம் சாத்தியமே இல்ல்லை என்றுதான் தோன்றியது. ஆனால், மித்தலையும் அவரது குடும்பத்தையும் சந்தித்த பிறகுதான், அந்த குடும்பத்துக்கு ஒரு மகன் இப்போது எவ்வளவு அவசியம் என்று உணர்ந்து கொண்டேன் ” என்கிறார் மித்தலின் புதிய கணவர் யோகேஷ்.

குடும்பம் உடையக்கூடாது, வழக்கத்தை மீறி திருமணம் நடைபெறக் கூடாது ஆகிய காரணங்களுக்காக கடுவா சமூகத்தில் கைம்பெண் மறுமணத்துக்கு ஆதரவு உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில், மருமகளுக்கு மாமியாராக அல்லாமல் தாயாகவே மாறி முடிவெடுத்துள்ளார் ஈஷ்வர்பாய் பிமானி.