எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண் : தமிழ்நாடு அரசு செய்த செயல்!!

1342

எவரெஸ்ட்..

இயற்கையின் படைப்பில் என்றுமே அலுக்காத இரண்டு விஷயங்கள் கடலும், மலையும். இரண்டுமே அதன் அசாதாரணத்திற்காகவே நம்மை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும். இதில் முக்கியமாக கருதப்படும் ஒன்று தான் எவெர்ஸ்ட் சிகரம். இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பது என்பது பலருக்கும் லட்சியமாக இருக்கும். இந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் பெரிய சாதனை படைத்ததாகவே கருதப்படுவர்.

அப்படி ஒரு சாதனையை படைத்த முதல் தமிழ் பெண்ணாக விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்செல்வி திகழ்கிறார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி. இவருக்கு சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக இவை எவெர்ஸ்ட் சிகரத்தை எட்டி சாதனை படைக்க எண்ணியுள்ளார்.

அதன்படி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வரும் இவர், தனது பயணத்தை கடந்த மாதம் தொடங்கினார். எப்படியாவது எவெர்ஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற இவரது தைரியத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சமும், அமைச்சர் உதயநிதி ரூ.15 லட்சமும் நிதியுதவி அளித்தனர்.


தனது பள்ளிப் பருவத்தில் தடகள வீராங்கனையாக விளங்கிய முத்தமிழ்செல்வி, கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் தின விழாவினையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்திலிருந்து கண்ணை கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் இறங்கினார்.

மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இமாச்சல் பிரதேசம், குலுமணாலி மலையில் தனது இருபிள்ளைகளுடன் ஒரு சிறுமியை முதுகில் கட்டிக்கொண்டும், மற்றொரு சிறுமியுடன் 165 அடிஉயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டு 55 நிமிடங்களில் கீழே இறங்கி சாதனை படைத்தார்.

வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் பரப்பிட 2022-ஆம் ஆண்டு குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்து 1389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார். மேலும், இமாச்சல பிரதேசம், லடாக் பகுதி, காங் யெட்சே பீக் -2 (KANG YATSE HILL) மலையில் 5500 மீட்டர் வரை ஏறி சாதனை படைத்தார். இந்த நிலையில் தற்போது எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்ணாக திகழ்கிறார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எவரஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி. அவரது பயணத்துக்கு கழக அரசு & தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்.” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்த ராஜசேகர் (எ) குட்டி என்ற மீனவ குடும்பத்தை சேர்ந்த இளைஞர், எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடி நாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.