தொடர்கிறது கனமழை.. சீறுகிறது தாமிரபரணி..!

323

திருநெல்வேலி……..

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக மழை பெய்து வருவதால் பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து 52 ஆயிரம் கன அடி வீதம் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து 6 நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்மழைக்கு முன்பே பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியிருந்தன. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் பாதுகாப்புக் கருதிப் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள வெள்ளம் அகத்தியர் அருவியை மூழ்கடித்தபடி பாலருவி போலப் பாய்ந்து செல்கிறது.

பாபநாசம் தலையணை, கோவில் அருகே உள்ள படித்துறை ஆகியவற்றை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்வதால் அப்பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து பாபநாசம் கோவில், நீர்மின்நிலையம், காரையாறு அணை ஆகியவற்றுக்குச் செல்லும் சாலையில் கால்வாய் மீதுள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி இடையே உள்ள பழைய பாலத்தின் கண்களை மூழ்கடித்துள்ள வெள்ளம், புதிய பாலத்தை மூழ்கடிக்க இன்னும் 2 அடிகளே உள்ளன. ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் ஆற்றோரமுள்ள வயல்கள் மூழ்கியுள்ளன. முன்னெச்சரிக்கையாகக் கரையோரக் குடியிருப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


மணிமுத்தாறு அணையின் 7 மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றுப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது. வெள்ளம் மோதியதில் பாலத்தின் மீதுள்ள நடைபாதை சேதமடைந்துள்ளது. இதனால் அந்தப் பாலத்தின் வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மாலை நிலவரப்படி பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 52 ஆயிரம் கன அடி வீதம் நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இவை தவிரக் கடனா ஆறு, ராமநதி ஆகியவற்றில் இருந்தும் வரும் நீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்வதால் நொடிக்கு அறுபதாயிரம் கன அடி வீதத்திற்கு மேல் வெள்ளம் பாய்கிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றிரவுக்குள் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 50 பேர் இரு குழுக்களாகப் பிரிந்து, பாபநாசத்தில் ஒரு குழுவினரும், திருநெல்வேலியில் ஒரு பிரிவினரும் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.