வெளிநாட்டில் ரசம் உணவுவகை மூலம் அதிசயத்தை நிகழ்த்திய தமிழர்!!

307

ரசம்…….

அமெரிக்க மக்களை தனது சமையல் திறமையால் கவர்ந்து கொரோனா சமயத்தில் ரசம் மூலம் அவர்களை கட்டிபோட்டுள்ளார் தமிழர் ஒருவர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது, ஏதோ மருத்துவத்தில் அதிசயம் நடந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இந்த ரசம் இவ்வளவு புகழ்பெற்ற உணவாக மன்னிக்கவும் உணவே மருந்தாக மாற ஒருவர்தான் காரணம். அவர் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சமையல் கலைஞர் அருண் ராஜதுரை.

அது எப்போதும் போல ஒரு சாதாரண நாள்தான், அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நாளில், 35 வயதான அருண் ராஜதுரைக்கு ஒரு யோசனை வந்தது.


அது தான் ரசம். இதில் சேர்க்கப்படும் மஞ்சள், பூண்டு, மிளகு என அனைத்து பொருள்களுமே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக் கூடியதாக இருந்ததுதான் காரணம். எனவே, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ரசம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார்.

அப்போது அமெரிக்காவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மூன்று மருத்துவமனைகளுக்கு உணவளித்து வந்தார். அந்த உணவுடன் சேர்த்து இலவசமாக இந்த ரசத்தையும் இணைத்து அனுப்பினார். எந்த கட்டணமும் இல்லாமல்.

அதற்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பும் ஆதரவும் அளவில்லாதது. அதன்பிறகே ரசத்தின் தேவை அதிகரித்தது. அதற்கு ரசம் என்ற பெயர் மறைந்து, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் பானமாக புகழ்பெற்றது. அருண் பணியாற்றிய அஞ்சப்பர் பிரின்ஸ்டன் ஹோட்டலின் உணவுப் பட்டியலில் தவிர்க்கவே முடியாத உணவாக ரசம் மாறியது. அதிகம் விற்பனையாகும் உணவாகவும் மாறியது.

இதன் புகழ் பல நகரங்களுக்கும் பரவியதால், நியூ யார்க், நியூ ஜெர்ஸி மற்றும் கனடாவில் உள்ள கிளை உணவகங்களிலும் ரசம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 முதல் 600 கோப்பை ரசம் விற்பனையானது.

நான் வீட்டில் இருந்து இதனை பரிசோதனை முறையில்தான் முயற்சித்தேன். ஆனால், இப்படி ஒரு சாதனையைப் படைக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.