ஆசிரியை கொலையில் அடுத்த அதிர்ச்சி… ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!

276

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் மாணிக்யன ஹள்ளியைச் சேர்ந்தவர் தீபிகா(28). இவரது கணவர் லோகேஷ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக தீபிகா பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு டூவீலரில் சென்ற தீபிகா அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் லோகேஷ் புகார் செய்தார்.

இப்புகார் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீபிகாவைத் தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன தீபிகாவின் வாகனம், மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ள மலையடிவாரத்தில் நிற்பதை பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த வண்டி எண்ணை வைத்து அது காணாமல் போன தீபிகாவினுடையது என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது குடும்பத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீபிகாவைத் தேடும் பணி தொடர்ந்தது.


இந்த நிலையில், யோகநரசிம்மர் சுவாமி கோயிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அப்போது மலையில் ஒரு வாலிபருக்கும், இளம்பெண்ணுக்கும் சண்டை நடந்துள்ளது. இதை வீடியோவாக எடுத்து போலீஸாருக்கு அனுப்பியுள்ளனர்.

ஒரு இளைஞர் பிறந்த நாள் அங்கு கொண்டாடப்பட்டதாகவும், அப்போது அவனும், அதில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கும் சண்டை போட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே,பள்ளி ஆசிரியை தீபிகாவை வாலிபர் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

இதையடுத்து மலையடிவாரத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் தீபிகாவின் உடலை இன்று போலீஸார் மீட்டனர். இந்த கொலைக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த நிதின் கவுடா(22) என்றது வாலிபர் தான் காரணம் என்று தீபிகாவின் கணவர் லோகேஷ் புகார் கூறியுள்ளார்.

தீபிகாவை சகோதரி என்று அழைத்த நிதின் கவுடா, இந்த சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போய் விட்டார். தீபிகாவுக்கு நிதின் செல்போன் எண்ணில் இருந்து தான் போன் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர் தான் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், தீபிகா காணாமல் போன விவகாரத்தில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தீபிகாவின் பெற்றோர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

” தீபிகா காணாமல் போனதாக புகார் அளித்தும் போலீஸார் சோதனை நடத்தாமல் அலட்சியம் காட்டினர். இதனால் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தும் வேலை சரியாக நடக்கவில்லை” என்று குற்றம் சாட்டினர்.

தீபிகாவின் சகோதரி கூறுகையில், ” தீபிகா காணாமல் போனது தெரிய வந்ததும் போலீசார் ஆங்காங்கே தேடியிருந்தால் அவர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கலாம். நேற்று முன்தினம் அவள் காணாமல் போனார்.

ஆனால், நேற்று வரை காவல் துறையினர் விசாரணையைத் தாமதப்படுத்தினர். இதன் பின் மலையடிவாரத்தில் தேடிய போது தீபிகாவின் சடலம் இன்று கிடைத்தது. எல்லாவற்றையும் நாங்களே செய்தால் காவல் துறை எதற்கு? அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றனர்.

மேலும் அவர் கூறுகையில், ” மலையில் இருந்து இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் அடிப்பதை சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்து போலீஸாருக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். முன்னதாக போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்திருந்தால்,

தீபிகா கொலை செய்யப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், காவல் துறையினர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர்” என்று குற்றம் சாட்டினார். பள்ளி ஆசிரியை கொலை விவகாரத்தில் கர்நாடகா போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.