ஆற்றில் தவறி விழுந்த பெண் 10 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர் தப்பிய அதிசயம்…!!!

86

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கல்லடா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கல்லாடா ஆற்றில் தவறி விழுந்து 10 கி.மீ., தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொல்லத்தை சேர்ந்த 64 வயது பெண்மணி அதிசயமாக உயிர் தப்பினார்.

கேரள மாநிலம், கொல்லம் கீழக்கே குளக்கடையைச் சேர்ந்த ஷியாமலையம்மா என்பவர், தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென ​பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் தவறி விழுந்த நிலையில் உயிருக்குப் போராடினார். அருகே இருந்த உள்ளூர்வாசிகள் ஷியாமலையம்மாவின் அபயக் குரலைக் கேட்டு மீட்பு பணியில் இறங்கினார்கள்.

ஆற்றின் நீரோட்டத்தில் சிக்கிய ஷியாமலையம்மா தண்ணீரில் மிதந்து முகத்தை உயர்த்திக் கொண்டு, செட்டியாரசீகத், நஞ்சக்கடவு, குன்னத்தூர் பாலங்களைக் கடந்து நீண்ட தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

குன்னத்தூர் பாலத்தில் சில பார்வையாளர்கள் ஷியாமலையம்மா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளை செல்போனில் படம் பிடித்தனர். ஆற்று நீரில் மிதந்தப்படியே சென்றதால், அவர் உயிருடன் இல்லை என்று கருதினர்.

செருபொய்காவில் உள்ள மங்களசேரி காட் அருகே உள்ள ஆற்றங்கரையில் உள்ள செடிகொடிகளில் ஷியாமளயம்மா அதிர்ஷ்டவசமாக சிக்கிக் கொண்டார்.

மதியம் 1.30 மணியளவில், தீபா மற்றும் சௌமியா என்ற இரண்டு உள்ளூர் பெண்கள், ஷியாமலையம்மாவின் அலறலைக் கேட்டு, ​​​​அவர் அந்த பகுதியில் ஒரு கொடியில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், படகோட்டிச் சென்று ஷியாமலையம்மாவை மீட்டனர். ஆற்றன் ஆழமான பகுதிகளுக்குப் பெயர் பெற்ற உருலுமலையில் ஷியாமலையம்மா படர்தாமரையில் சிக்கிக் கொண்டார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.