இறந்தவர்களின் சடலங்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுகிறதா? அதிர்ச்சி வீடியோவின் உண்மை தகவல்!!

957

மெக்சிகோ நாட்டில் இறந்தவர்கள் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா நோய் தொற்று உலக நாடுகளை மிக தீவிரமாக பாதித்து வருகிறது. தினசரி அடிப்படையில் கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் ஒருபக்கம் இருக்க, உயிரிழந்தோர் எண்ணிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தோர் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக கூறப்படுகிறது.

20 நொடிகள் ஓடும் வீடியோவில் ஹெலிகாப்டரில் இருந்து ஒவ்வொருத்தராக கீழே விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ, மெக்சிகோ இப்படித்தான் இறந்தவர்கள் உடல்களை அப்புறப்படுத்துகிறது என்பது போன்ற தலைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் வீடியோவில் இருப்பது எம் 26 ஹாலோ ஹெலிகாப்டர் ஆகும். அதில் இருப்பவர்கள் வான்வெளி சாகசம் செய்யும் வீரர்கள் ஆவர்.

வைரல் வீடியோ வான்வெளி சாகசம் செய்ய முற்படும் போது எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் வைரல் வீடியோ தற்போது எடுக்கப்படவில்லை என்பதும், ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்தது இறந்தவர்கள் உடல்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.