ஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அபிலாஷ் ஜி தேவன் என்பவர் தாய்நிலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கதை ஒரு அப்பா மகள் பாச பிணைப்பினை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை போர் உச்சத்தில் இருந்த வேளையில் தன் உற்றாரையும் உறவினர்களையும் இழந்து இறுதியில் உயிரோடு மிஞ்சிய தன் ஒரே ஒரு மகளுடன் தமிழகம் வரும் கதாநாயகன், வந்த இடத்தில் ஒரு பாழடைந்த ரோட்டோர பயணிகள் நிழற்குடையில் தன் வாழ்க்கையை நகர்த்துகிறார்.
அதன் அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களும் பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சரவணனும் அவர்களுக்கு புதிய உறவினர்களாக மாற, தன் மகளுக்கு மிக அழகான அற்புதமான ஒரு வாழ்க்கையை உருவாக்க நினைக்கிறார்.
அங்குள்ள நல்லவர்களாகிய ஒவ்வொரு மனிதரும் அவர்களுக்கு உதவ ஒரு சொர்க்கம் போன்ற வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். தன் மகள் இழந்த அனைத்தையும் அவளுக்காக சேர்க்க ஆரம்பிக்கிறார். அதன் பின்னர் என்ன ஆகிறது அவரது கனவு நினைவாகியதா என்பதை ஆழமாகப் படம் பதிவு செய்துள்ளதாகவும் அபிலாஷ் ஜி தேவன் குறிப்பிட்டுள்ளார்.
இத்திரைப்படத்தில் சேதுராமனாக டாக்டர் அமர் ராமசந்திரனும் அவரது மகள் தமிழினியாக நேஹா அமரும் சரவணனாக மறைந்த நடிகர் பாலாசிங்கும் நடித்துள்ளனர்.
தவிர நிமிஷா நம்பியார், தீபக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசெப்பச்சன் இசை அமைத்திருக்கிறார்.
நேனி என்டேர்டைன்மெண்ட் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் தற்போது டொரொண்டோ திரைப்பட விழா உட்பட பல சர்வதேச விழாக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முடக்கம் முடிந்தபின் விரைவில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.