ஏழு நாட்களில் 71 இடங்களில் கொரோனா பரவல்: மீண்டும் ஒரு கொரோனா பரவலை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ்!

894

பிரான்சில் ஏழு நாட்களில் 71 இடங்களில் கொரோனா பரவியுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்த விசாரணையில் பிரான்ஸ் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.

நாட்டில் R எண் 1ஐ விட அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் பிரான்சில் கொரோனா காலூன்றத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். R எண் என்பது, ஒருவரிடமிருந்து கொரோனா எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் காட்டும் எண்ணாகும்.

தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள கோடை விடுமுறை மீண்டும் கொரோனா அபாயத்தை ஏற்படுத்தலாம் என அவர்கள் கருதுகிறார்கள். ஜனவரி 25ஆம் திகதி, பிரான்சில், முதல் மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானது தெரியவந்தது.

பிப்ரவரி 15ஆம் திகதி பிரான்சில் முதல் நபர் கொரோனாவுக்கு பலியானார். அதிலிருந்து அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்றியவர்களீன் எண்ணிக்கை 170,094ஐ தொட்டது, அத்துடன், 29,979 பேரை பலிவாங்கியது கொரோனா.


ஏப்ரல் 1 அன்று, பிரான்சில் கொரோனா உச்சம் தொட்டது. அன்று 7,578 பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். அதற்குப் பின் தொற்று குறைய ஆரம்பித்தது. இப்படியிருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஜூலை மாதம் 7ஆம் திகதி 1,375 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டது. ஜூன் 27க்கு பிறகு இதுதான் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் அதிக எண்ணிக்கை ஆகும். ஜூலை 10 கணக்குப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 621.

கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஏப்ரல் 4 அன்று பிரான்சில் மிக அதிகமாக 2,004 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். நாடு கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியபின் இந்த எண்ணிக்கை குறைந்தாலும், ஜூலை 10 அன்று மேலும் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.

தற்போதைக்கு அமெரிக்கா, பிரேசில், பிரித்தானியா, இத்தாலி, மெக்சிகோவைத் தொடர்ந்து, கொரோனாவால் அதிகம் பலி எண்ணிக்கையைக் கொண்ட நாடுகளில் பிரான்ஸ் ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் மாதங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதை எதிர்கொள்ள தயாராகி வருவதாக இந்த வாரம் புதன்கிழமையன்றுபிரான்ஸ் அரசு தெரிவித்தது. இருந்தாலும், மீண்டும் நாட்டை முடக்கும் திட்டமில்லை என்றும் அது உறுதிபடுத்தியுள்ளது.