ஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்: பீதியில் உறைந்த பொதுமக்கள்!!

747

பிரித்தானியாவில் டான்காஸ்டர் நகரில் கடந்த ஏழு வாரங்களிலாக 5 பெண்கள் மர்மமாக கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

அமண்டா செட்விக், மிச்செல் மோரிஸ் மற்றும் ஆமி-லியான் ஸ்ட்ரிங்ஃபெலோ ஆகியோர் சமீபத்திய 7 வாரங்களில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் பெயரிடப்படாத இரண்டு பெண்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மர்ம கொலைகளில் தொடர்பு இருப்பதாக கருதவில்லை என தெரிவித்துள்ள பொலிசார், இந்த சம்பவங்கள் தொடர்பாக ஒரு தொடர் கொலைகாரனைத் தேடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தென் யார்க்ஷயர் நகரில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான சம்பவம் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 100,000 பேர் வசித்துவரும் டான்காஸ்டர் நகரில் கடந்த ஆண்டு மட்டும் 23 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 49 வயதான அமண்டா செட்விக் என்பவரின் சடலம் மே 19 அன்று அஸ்கெர்னில் மேனர் வேவில் உள்ள ஒரு குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த விவகாரம் தொடர்பில் 48 வயது நபர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர் விடுவிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, மே 24 அன்று, ஸ்டெய்ன்ஃபோர்த், ராம்ஸ்கீர் வியூவில் உள்ள ஒரு வீட்டில் மிச்செல் மோரிஸ் தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். 52 வயதான அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களுக்கு பின்னர் இறந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் 47 மற்றும் 33 வயதுடைய இரண்டு ஆண்களும், 24 வயது பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர், மேலும் விசாரணைகள் தொடர்ந்த நிலையில் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜூன் 5 ஆம் திகதி ட்ரைடன் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் 26 வயதான ஆமி-லியான் ஸ்ட்ரிங்ஃபெலோ படுகாயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதில் அவரது காதலன் 45 வயது டெரன்ஸ் பாப்வொர்த் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூன் 8 திங்கள் அன்று, பெயர் குறுப்பிடப்படாத 28 வயது பெண்ணின் சடலம், டான்காஸ்டரின் மெக்ஸ்பரோவின் மெயின் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சனிக்கிழமை தோர்ன் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவ உதவிக்குழுவினர் அது கொலை என பின்னர் உறுதி செய்துள்ளனர். தற்போது இந்த 5 கொலை வழக்கு தொடர்பில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.