கடனைத் திருப்பிக் கேட்டதால் கொலை : ஓய்வு பெற்ற ஆசிரியை மரணத்தில் திடீர் திருப்பம்!!

336

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், தார்வாட்மாவட்டத்தில் ஓம் நகரைச் சேர்ந்தவர் கிரிஜா நடுராமாதா(63). ஆசிரியையான இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தனியாக வசித்து வந்த கிரிஜா, அண்டை வீட்டாருடன் அதிகம் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில்,டிச.12-ம் தேதி கிரிஜா வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வித்யாகிரி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கிரிஜா வீட்டிற்கு போலீஸார் வந்துபார்த்த போது அது பூட்டியிருந்தது.  இதனால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் கிரிஜாவின் உடல் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் இது இயற்கை மரணமாக இருக்கலாம் என்றும், இதன் காரணமாக சடலம் அழுகியிருக்கலாம் என போலீஸார் நம்பினர்.

ஆனால், பிரேதப் பரிசோதனை செய்தபோது, ​ கிரிஜா​இயற்கையாக மரணமடையவில்லை என்பது தெரியவந்தது. ஏனென்றால், சடலம் மிகவும் சிதைந்திருந்ததாலும்,

கழுத்தில் ஒரு அடையாளம் இருந்தது. இதைப் பார்த்தபோது அவர் மூச்சுத்திணறிக் கொல்லப்பட்டது தெரியவந்தது. ஆசிரியை கிரிஜாவுக்கும், அமர்கோலா கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் என்ற வாலிபருக்கும் பழக்கம் இருந்துள்ளது.

அடிக்கடி அவர் கிரிஜா வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.அதன்படி, கிரிஜாவிடம் மஞ்சுநாத் கடன் வாங்கியிருந்தார்.

பழக்கமுள்ள நபர் தானே என்று கிரிஜா கடன் கொடுத்துள்ளார். ஆனால், பல ஆண்டுகளாகியும் மஞ்சுநாத் கொடுத்த கடனைத் திருப்பித் தரவில்லை. இதனால் கொடுத்த கடனைத் திருப்பித் தரச்சொல்லி மஞ்சுநாத்திடம் கிரிஜா அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனால் பணத்தைத் திருப்பித் தர விருப்பமில்லாத மஞ்சுநாத், தனியாக இருக்கும் கிரிஜாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

டிசம்பர் இரண்டாவது வாரத்தில் கிரிஜா வீட்டிற்கு மஞ்சுநாத் சென்றிருந்தார். நீண்ட நேரம் கிரிஜாவுடன் பேசிவிட்டு கிளம்பும் போது, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கொலையாளி மஞ்சுநாதை வித்யாகிரி போலீஸார் நேற்று கைது செய்தனர். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட ஓய்வு பெற்ற ஆசிரியரை வாலிபர் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.